2017-04-06 15:50:00

தவக்காலச் சிந்தனை : சிலுவை வழி


பாடுகளின்றி பலன்கள் இல்லை என்பது நம் எல்லாருக்கும் தெரிந்தது. இறைவழி சென்று, மனமாற்றம் கண்டு நடப்போரின் வாழ்க்கை, எளிதாக இருப்பதில்லை. இதுவரை வராத சோதனைகள், தேடிப்பிடித்து, நம்மிடம் அண்டி வருவது போன்று, நம் வாழ்வு பயணிக்கும். எனக்கு ஏன்  இந்தச் சோதனை என்ற கேள்விகளும் நம்மிடம் தோன்றும். பழைய வாழ்வுக்குச் சென்றிட மனம் துடிக்கும். இறைவழி இடுக்கண் நிறைந்ததே. பலர் கல்லெறிய தயாராக இருப்பார்கள். ஏளன பேச்சுக்களும், சிரிப்புக்களும், நம்மை நோக்கி வரும். ஒன்றை மனதில் கொள்வோம். இக்கட்டான சூழ்நிலையில், நாம் தனிமையில் இல்லை. இறைவன் நம்மோடு துணை நிற்கிறார். மகிமை நிறைந்த உயிர்ப்பின் வாழ்வுக்கு பாடுகளின் பயணமே சிறந்த வழி. நம் பாடுகளிலும் இறைவன் நம் பக்கம் இருக்கிறார். சிலுவை வழியே மீட்பின் வழி என நமக்கு உணர்த்தும் இறை இயேசுவின் அரவணைப்பில், மீட்பின் வழி செல்வோம். யாவே என் பக்கம் இருக்கும்போது யாருக்கும் அஞ்சேன் என்று கூறும் இறைவாக்கினர் எரேமியாவைப்போல, இடர் வரினும் துயர் வரினும் இறைவன் என்னை கரம் பிடித்து தாங்குகிறார் என்பதை மனதில் கொள்வோம். சிலுவையின் வழியில், தவறி விழும்போது, மீண்டும் நடந்திட, தொடர்ந்து பயணித்திட, இத்தவக்காலம் நம்மை வழிநடத்தட்டும்.

சிலுவையின் வழியே உயிர்ப்பின் வெற்றி! (அ.சகோ.இராஜ சேகரன் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.