2017-04-06 16:47:00

அமைதி கலாச்சாரம் நோக்கி, சிக்காகோ உயர்மறைமாவட்டம்


ஏப்.,06,2017. வன்முறைக்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் சிக்காகோ உயர்மறைமாவட்டம் மேற்கொள்ளும் என்றும், இம்முயற்சிக்கு திருத்தந்தை தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார் என்றும் சிக்காகோ பேராயர், கர்தினால் Blase Cupich அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

சிக்காகோ நகரின் வன்முறைகள் நிறைந்த பகுதிகளில், வன்முறைக்கு எதிராகவும், அமைதி வேண்டியும், ஏப்ரல் 14, புனித வெள்ளியன்று, அமைதிப் பேரணி நடைபெறும் என்று கூறிய கர்தினால் Cupich அவர்கள், இந்த முயற்சியைப் பாராட்டி திருத்தந்தை அனுப்பியிருந்த மடலை செய்தியாளர்களுக்கு வாசித்தார்.

புனித வெள்ளியன்று, அமைதிப் பேரணியும் சிலுவைப்பாதையும் இணைந்து நடைபெறும் வேளையில், சிக்காகோ நகரில் வன்முறைகளில் பலியானோரின் பெயர்கள் ஒவ்வொரு தலத்திலும் வாசிக்கப்பட்டு, அவர்களுக்காக சிறப்பான செபங்கள் மேற்கொள்ளப்படும் என்று கர்தினால் Cupich அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

வன்முறையை ஒழிப்பதற்கு, மேடைப் பேச்சுக்கள் உதவாது. மாறாக, ஒவ்வொருவராக மனம் மாறுவதற்கு, குறிப்பாக, இளையோரும் குழந்தைகளும் மனம் மாறுவதற்கு அவர்களிடம் நேரடியாக விண்ணப்பிக்கவேண்டும் என்று, கர்தினால் Cupich அவர்கள் எடுத்துரைத்தார்.

அமைதி கலாச்சாரத்தை சிக்காகோ நகரின் அனைத்து பள்ளிகளிலும் வளர்க்க பெரும் முயற்சிகளை தன் மறைமாவட்டம் மேற்கொள்ளும் என்றும், இதற்காக, மறைமாவட்டம், 2,50,00 டாலர்கள் நிதியை ஒதுக்கியுள்ளது என்றும், கர்தினால் Cupich அவர்கள் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஏப்ரல் 5ம் தேதி வரை, சிக்காகோ நகரில் இடம்பெற்ற வன்முறைகளில், 773 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.