2017-04-05 16:02:00

பிரித்தானிய இளவரசர், முஸ்லிம் குழுவினருடன் திருத்தந்தை


ஏப்.05,2017. "எல்லாருக்கும், குறிப்பாக, தேவையில் இருக்கின்ற நம் சகோதர, சகோதரிகளுக்கு நம்மை அர்ப்பணிப்பதன் வழியாக, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றுவோம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியாயின.

மேலும், இப்புதன் காலை ஒன்பது மணியளவில் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள சிறிய அறை ஒன்றில், பிரித்தானியாவின் முஸ்லிம் உயர்மட்ட குழுவினரைச் சந்தித்து நல்வாழ்த்து தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஐரோப்பாவின் மஜ்லிஸ் (Majlis) மற்றும், உலாமா (Ulama) அமைப்பின் தலைவர் Moulana Ali Raza Rizvi; பிரித்தானியாவின் பிரித்தானிய முஸ்லிம் கழகத் தலைவர் Moulana Muhammad Shahid Raza; கிறிஸ்தவ-முஸ்லிம் கழக இணைத் தலைவர் Shaykh Ibrahim Mogra; ஸ்காட்லாந்த் Ahlul Bayt கழக பொது இயக்குனர் Moulana Sayed Ali Abbas Razawi ஆகியோர் இக்குழுவில் இருந்தனர்.

இக்குழுவினரை மகிழ்வோடு வரவேற்பதாகக் கூறியத் திருத்தந்தை, இன்றைய மனித சமுதாயத்திற்கு நாம் ஆற்றக்கூடிய மிக முக்கியமான பணி ஒன்று உள்ளது என்றும், நம் சகோதர, சகோதரிகளின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்க வேண்டியதே அப்பணி என்றும் கூறினார்.

எல்லா வல்லமையும், இரக்கமும் உள்ள இறைவன், இக்குழுவினரை ஆசீர்வதிக்குமாறு செபிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஏப்ரல் 04, இச்செவ்வாய் மாலையில், வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும், அவரின் துணைவியார் கமில்லா ஆகிய இருவரையும், வத்திக்கானின் ஆறாம் பவுல் அறையில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் இந்த அரசகுலத் தம்பதியினர் சந்தித்து உரையாடினர்.

சுற்றுச்சூழல் விவகாரம் குறித்து இச்சந்திப்புக்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

அரசகுலத் தம்பதியினரோடு வந்திருந்த, பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஐரோப்பா மற்றும், ஆசிய விவகார அலுவலக அமைச்சர், சர் ஆலன் டுன்கன் அவர்களும், இச்சந்திப்புகளில் கலந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.