2017-04-05 16:42:00

கலாச்சார மாற்றத்தைக் கொணர்வதே, மனித வர்த்தகத்தை ஒழிக்கும்


ஏப்.,05,2017. புலம் பெயர்ந்தோருக்கும் குடியேற்றதாரருக்கும் தேவையான உதவிகள் செய்வதில், நாட்டு அரசுகள் இணைந்து வருவதற்குப் பதில், இவர்களை, அரசியல் கருவிகளாக மாற்றிவரும் போக்கு குறித்து திருப்பீடம் கவலை கொள்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மனித வர்த்தகத்தை மையப்படுத்தி, வியன்னாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணி Janusz Urbanczyk அவர்கள், இத்திங்கள், மற்றும் செவ்வாய் ஆகிய இருநாள்கள் வழங்கிய உரைகளில், மனித வர்த்தகம் குறித்து திருப்பீடம் கொண்டுள்ள கவலைகளை எடுத்துரைத்தார்.

மிக நெருக்கடியானச் சூழல்களில் இருக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் மனித வர்த்தக ஆபத்து; மனித வர்த்தகத்திற்கு எதிரான போராட்டத்தில், குழந்தைகளைப்  பாதுகாக்கும் வழிமுறைகள்; வழிமுறைகளைச் செயல்படுத்தும் திட்டங்களை உருவாக்குதல் என்ற மூன்று தலைப்புக்களில், அருள்பணி Urbanczyk அவர்கள், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அடிப்படை மனித உரிமைகளைப் பேணும் மனநிலையை உருவாக்கவும், மனித நேய கலாச்சாரத்தை வளர்க்கவும், உலகெங்கும் கல்வி வழியே ஒரு கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவருவதே, மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு சிறந்த வழி என்று, அருள்பணி Urbanczyk அவர்கள், தன் உரைகளில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.