2017-04-04 15:39:00

தவக்காலச் சிந்தனை: உண்மை தரும் விடுதலை


‘உண்மை விடுவிக்கும்’ என்பது யாவரும் அறிந்ததே. வாழ்வின் எந்நிலையிலும், நாம் உண்மையின் பக்கம் இருக்கும்போது, துன்ப துயரங்கள் வந்தாலும், இறுதியில், நம்மை விடுவிப்பது இந்த உண்மையே. உண்மை, நம்மை, தண்டனையிலிருந்து மட்டுமின்றி, பாவத்திலிருந்தும் விடுவிக்கிறது. இயேசுவும் இன்று இதையே வலியுறுத்துகின்றார். இது, ஆன்மீக விடுதலை. பழி பாவ கண்டனத்திலிருந்து நம்மை விடுவிப்பது, இந்த உண்மை.

எவ்வாறு இதை கைக்கொள்வது? முதலில், நாம் நமக்கு உண்மையாக இருத்தல் வேண்டும். நம் மனசாட்சிக்கு உண்மையாக இருத்தல் வேண்டும். பல நேரங்களில், நமது இரட்டை வேடம் நம்மிடமிருந்து துவங்குகிறது. உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும் சமூகத்தில், 'மனசாட்சிக்கு உண்மையாக நட' எனக்கூறுவது, கேலிக்கூத்தாகிறது. கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்த காலம் போய் இன்று, CCTV  கேமராக்களுக்கு பயப்படும் காலம் என மாறி விட்டது.

அரசியல் இலாபங்களுக்காக, மனசாட்சியை மழுங்கடிக்கும் அரசியல்வாதிகளால், இன்று தமிழகம் சந்திக்கும் சவால்கள், இதற்கு ஒரு சாட்சி. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்களை, வெறும் அரசியல் இலாபத்திற்காகத் திணிக்க முற்படும் இன்றைய அவல  நிலையில், உண்மையில், விடுதலை என்பது, புரியாத புதிர்தான். நமக்கும் பிறருக்கும் உண்மையாக இருக்கும்போது, வாழ்வில், புதுமைகள் வழி ஆண்டவர் அருள் வழங்குவார். உண்மை, நம்மிலும் நம்மை ஆள்வோரிடத்திலும் உயிர் பெற்றிட, இத்தவக்காலத்தில் வேண்டுவோம்.

மனதின் உண்மையே, மானுடத்தின் நன்மை.

-அருள் சகோதரர் இராசசேகரன் சே.ச.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.