2017-04-04 16:12:00

அணிந்துகொள்ளும் சிலுவை, அலங்காரப் பொருள் அல்ல


ஏப்.,04,2017. நாம் அணிந்துகொள்ளும் சிலுவை, கிறிஸ்தவர்கள் என்ற அடையாள உரிமையை மட்டும் தரவில்லை; மாறாக, நம் பாவங்களைச் சுமந்த கடவுளின் அடையாளமாகவும் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இன்றைய நற்செய்தியில் பரிசேயர்களுக்கு இயேசு வழங்கிய அறிவுரை, எச்சரிக்கை இவற்றை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.

'நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்!' என்று இயேசு மீண்டும், மீண்டும் பரிசேயருக்கு தந்த எச்சரிக்கை, நமக்கு வழங்கப்படும் எச்சரிக்கையாகவும் அமைகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவத்தில் சாவது மிகக் கொடுமையான நிலை என்று எச்சரித்தார்.

தீமைக்கு ஓர் அடையாளமாக விளங்கும் பாம்பு, வெண்கலப் பாம்பாக கம்பத்தில் உயர்த்தப்பட்டபோது, அது, சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவுக்கு மறைமுகமான ஓர் அடையாளமாக மாறியது என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, குற்றவாளியைப்போல் சிலுவையில் அறையப்பட்ட இயேசு, பாவிகளில் ஒருவராகத் தன்னையே கையளித்தார் என்று எடுத்துரைத்தார்.

நாம் சிலுவையை அணிந்துகொள்ளும்போது, ஏதோ ஒரு விளையாட்டுக் குழுவினர் அணிந்துகொள்ளும் அடையாளம்போல அதைக் கருதக்கூடாது என்றும், பாவத்தை நீக்க, தன்னையே ஒரு பாவிபோல் கிறிஸ்து தாழ்த்திக்கொண்டதன் நினைவாக அச்சிலுவையை நாம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்தவர்களுக்கு, சிலுவை, ஓர் அலங்காரப் பொருளாக, குழு அடையாளமாக இருப்பது பயனற்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் சுமக்க வேண்டிய, நம் தோள்களை புண்படுத்தக்கூடிய சிலுவைகளுக்கு அடையாளமாக இருப்பதே, சிலுவையின் பொருள் என்று வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.