2017-04-03 16:55:00

வாரம் ஓர் அலசல் – எல்லாரும் நல்லவரே, பார்வையை சரிசெய்தால்..


ஏப்.03,2017. ஆதித்யா பிர்லா(Aditya Birla) அவர்கள், ஆசியாவில் அலுமினியம் உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்ற ஹிண்டால்கோ(Hindalco) நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த சமயத்தில் ஒருநாள், மூத்த அதிகாரி ஒருவர், பெரிய தவறு ஒன்றைச் செய்துவிட்டார். அதனால் அந்நிறுவனத்திற்கு, பத்து கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. பிர்லா அவர்கள், அந்த அதிகாரி மீது, கடும் நடவடிக்கை எடுப்பார், அவரை வேலையிலிருந்து நீக்கி விடுவார் என, மற்ற பணியாளர்கள் அஞ்சினர். ஆனால் பிர்லா அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்தத் தவறைச் செய்த அதிகாரியை அழைப்பதற்கு முன்னர், பிர்லா அவர்கள், ஓரிடத்தில் அமர்ந்து, ஒரு நோட்டை எடுத்து, அதன் தலைப்பில், அந்த அதிகாரிக்கு ஆதரவாக இருக்கின்றவை என்று எழுதினார். ஒருமுறை இந்நிறுவனம் சரியான தீர்மானம் எடுப்பதற்கு உதவியதன் வழியாக, இலட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் கிடைப்பதற்கு அந்த அதிகாரி உதவியிருக்கிறார். அந்த அதிகாரியின் இந்தச் சாதனை உட்பட, அவரின் திறமைகளை வரிசையாக எழுதினார். அவ்வளவுதான். அதற்குப் பின் ஆதித்யா பிர்லா அவர்கள் என்ன செய்திருப்பார் என, அன்பு நேயர்களே, நம்மால் யூகிக்க முடிகின்றது. ஆதித்யா பிர்லா அவர்களின் இந்த நடைமுறை தத்துவத்தை நேரிடையாகப் பார்த்த, அந்நிறுவனத்தின் மற்றொரு மூத்த அதிகாரி ஒருவர், தானும் அதே நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியதால், தன்னில் ஏற்பட்ட நல்மாற்றம் பற்றி சொல்லியிருக்கிறார்.

நான் யாரையாவது குறை கூறி ஒதுக்குவதற்கு நினைக்கும்போதெல்லாம், ஓரிடத்தில் என்னையே வலுவந்தமாக அமரச்செய்து, அந்த மனிதரின் நல்ல பண்புகளை எழுதும்படி என்னையே கட்டாயப்படுத்துவேன். நான் எழுதி முடிப்பதற்குள், அந்த ஆள் பற்றிய சரியான கண்ணோட்டம் என்னில் உருவாகி விடும். இவ்வாறு நான் செய்து வருவதால் எனது கோபம், எனது கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கின்றது. எனது கட்டுக்கடங்காத கோபத்தை, எத்தனையோ முறை தவிர்த்திருக்கிறேன். அதனால், அன்பர்களே, நீங்களும், மற்றவர்களோடு, ஒவ்வொரு நாளும், அல்லது அடிக்கடி சேர்ந்து பணி புரிய நேர்ந்தால், இந்த வழிமுறையைக் கையாளுங்கள். யார் பற்றியும் திடீரென ஒரு முடிவுக்கு வந்து விடாமல், அந்த மனிதரிடம் இருக்கின்ற சிறந்த பண்புகளை வரிசைப்படுத்துங்கள். இவ்வாறு செய்வதால், மற்றவரை சரியான எண்ணத்தோடு அணுக முடியும்.

ஒருவர் ஓர் உணவகத்திற்குச் சென்று மேஜையில் அமர்ந்தார். அந்த உணவகத்தில், WiFi  வசதி உண்டு என்ற அறிவிப்பைப் பார்த்தார். அவரிடம் வந்த பணியாளரிடம், இந்த இடத்தில் வாட்சப்பை பயன்படுத்துவதற்கு கடவுச்சொல் (password) என்ன என்று கேட்டார். அதற்கு அவர், முதலில் சாப்பிடு என்று பெருள்படும் “eat first" என்றார். பின்னர் உணவு, மேஜைக்கு வந்தது. வந்தவர் சாப்பிடத் தொடங்கினார். அப்போது பரிமாறியவரிடம் கடவுச்சொல் என்ன என்று கேட்டார். அவரும் “eat first” என்றே சொன்னார். கடுப்பாகிப் போன அவர், சாப்பிட்டு முடிந்ததும், காப்பி கேட்டார். அதைக் கொண்டு வந்தவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதே பதில்தான் கிடைத்தது. பின்னர் அந்த உணவக நிர்வாகியிடமும், அதே கேள்வியைக் கேட்டார். அதே பதில்தான் கிடைத்தது. சாப்பிட்டதற்குப் பணம் செலுத்திய பின், கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார் அவர். அப்போது வாசலில், கடவுச்சொல் என்று எழுதியிருந்த பலகையைப் பாரத்தார். அதில் “eat first” என எழுதியிருந்தது. அவசியமின்றி, தன்னையும் கோபத்திற்கு உள்ளாக்கி, பிறரையும் துன்பத்துக்கு உள்ளாக்கிய நிலையை எண்ணி வருந்தினார் அவர். ஆம். எதையும் சரியாகப் பார்க்காமல், யார் சொல்வதையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், இப்படித்தான் சிலர் அவசியமின்றி கோபப்படுகின்றனர்.

ஏப்ரல் 4, இச்செவ்வாய், நிலக்கண்ணி வெடிகள் உலக விழிப்புணர்வு நாள். ஏப்ரல் 7 வருகிற வெள்ளி, ருவாண்டா நாட்டில் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நாள். மத்திய ஆப்ரிக்காவிலுள்ள ருவாண்டா நாட்டில், 1994ம் ஆண்டில், ஹூட்டு மற்றும் டுட்சி இனங்களின் மக்களுக்கிடையே ஏற்பட்ட வெறுப்புணர்வால், மூன்று மாதங்களில், எட்டு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். வெறுப்பின், கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற இம்மக்கள், கையில் கிடைத்த அரிவாள், சுத்தியல் போன்ற சாதாரண கருவிகளைக்கொண்டு கண்மூடித்தனமாக ஒருவரையொருவர் கொலை செய்தனர். இது நடந்து பத்து ஆண்டுகள் கழித்து, 2004ம் ஆண்டில் ஐ.நா. பொது அவை இந்த உலக நாளை உருவாக்கியது. உலகில் இத்தகைய இனப்படுகொலைகள் இனி இடம்பெறவே கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்த உலக நாள் உருவாக்கப்பட்டது. ஆனால், மத்திய கிழக்கில், குறிப்பாக, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில், இன்றும், ஒவ்வொரு நாளும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும், ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும், ஒருவர், உலகில் ஏதோ ஓரிடத்தில் நிலக்கண்ணி வெடிகளால் கொல்லப்படுகின்றார் அல்லது உறுப்புக்களை இழக்கின்றார். வளரும் நாடுகளில், மூன்றில் ஒரு பகுதி நாடுகளின், சாலைகளிலும், நடைபாதைகளிலும், பத்து கோடி நிலக்கண்ணி வெடிகள் இன்னும் புதையுண்டு கிடக்கின்றன. மெதுவாக பெருமளவில் மக்களைக் கொல்லும் இந்த ஆயுதங்களுக்கு வாரத்திற்கு, 500 பேர் வீதம் பலியாகின்றனர். இந்த ஆயுதங்கள், உலகில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே, பழங்காலப் போர்ப் படைகளால் பயன்படுத்தப்பட்டன எனக் கூறப்படுகிறது. மனிதரின் வெறுப்புணர்வும், காழ்ப்புணர்வும், கோபமும் கட்டுக்கடங்காமல் செல்லும்போது, தன்னலமும், பேராசையும் தலைக்கேறும்போது, சக மனிதர்களின் உயிர் மதிக்கப்படுவதில்லை. 

கோபமே, பாவங்களுக்கெல்லாம் தாய், தந்தை என்று சொல்வார்கள். கடந்த சனவரியில், மெரினாவில் அமைதியாக நடந்த ஓர் அறவழிப்போராட்டம், இறுதியில் வன்முறையில் முடிந்ததற்கு, எவரோ ஒருவரின் கோபமும், அடங்கா வெறியும்தான் காரணம் என்பதை நாம் அறிவோம். ஒருவர் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், அவர் தன்னிடம் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவருடைய கோபம் அவரையே கொன்று விடும்’என்று திருவள்ளுவரும் எச்சரித்திருக்கிறார். கோபம் என்கிற கொடும் வசீகரத்துக்குள் விழுந்து தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொண்ட அசுரர்கள் இருக்கிறார்கள், சாபத்துக்கு ஆளான தேவர்கள் உள்ளனர், கோபவயப்பட்டதால், மாறாப் பழிக்கு ஆளான ரிஷிகளும் உள்ளனர். இதை நிரூபிக்கும் விதமாக புராணங்களிலும் இதிகாசங்களிலும் எத்தனையோ கதைகளும் உள்ளன.

கோபம் என்பது, பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்பார்கள். கோபம் வாழ்வையே புரட்டிப் போட்டு விடும். கோபம் மாரடைப்புக்கு வழியமைக்கும். வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளே அடக்கிய கோபமோ, பழிக்குப் பழி செய்ய வழி தேடும் என்பார்கள். இந்நேரத்தில், வாட்சப்பில் வந்த பகிர்வு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஓர் இளம் பெண், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில், பெரிய சப்தத்துடன், மூட்டை முடிச்சுகளுடன் ஒரு பெரிய உருவம் கொண்ட வயதான பெண் ஒருவர், அந்த இளம்பெண்ணை நெருக்கிக்கொண்டு அமர்ந்தார். அடுத்த இருக்கையில் இருந்தவருக்கு அதைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பொறுக்க முடியாமல் அந்த இளம் பெண்ணிடம், ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு ஒரு புன்முறுவலைப் பதிலாகக் கொடுத்த இளம்பெண் இவ்வாறு சொன்னார். நான் கோபப்படுவதோ, வாதிடுவதோ அர்த்தமற்றது. இந்தப் பயணம் மிகவும் குறுகியது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன். முக்கியமற்ற விடயங்களில் கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லை. நம் வாழ்வு குறுகியது. இதை, சண்டைகள், கோபங்கள், விவாதங்கள் போன்றவற்றால் ஏன் நிரப்ப வேண்டும்? மன்னிப்பு வழங்க மறுத்தும், பிறர்மீது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டும் ஏன் வாழ வேண்டும்? அதனால் நம் நேரமும் சக்தியுமே வீணாகின்றன. அதற்கு மாறாக அன்பு, நன்றியுணர்வுகளால் வாழ்வை நிறைக்கலாமே.

ஒரு சமயம், ஒரு குடும்பம் வீட்டைப் பூட்டிவிட்டு சுற்றுலா சென்று திரும்பியது. அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சாவியைக் காணவில்லை. மாற்றுச் சாவியும் வீட்டுக்குள் இருந்தது. வேறுவழியின்றி சுத்தியலால் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றது குடும்பம். உள்ளே வந்ததும் அலமாரியில் இருந்த மாற்றுச் சாவியை எடுத்து முத்தமிட்ட வீட்டுத்தலைவி, அதை மேஜையின் மீதிருந்த சுத்தியலின் அருகில் வைத்துவிட்டுச் சென்றார். சுத்தியலுக்கோ கடும் கோபம். அதனால் சாவியிடம், `நா இல்லைன்னா இவங்க வீட்டுக்குள்ளேயே வந்திருக்க முடியாது. ஆனா, மரியாதை கொடுக்கிறது என்னவோ உனக்கா'’ என்று கேட்டது. அதற்கு, சாவி, ‘‘நீ பூட்டோட மண்டையை உடைப்பாய். ஆனால், நானோ பூட்டோட இதயத்தைத் திறக்கிறேன். அதனால்தான் எனக்கு இந்த மரியாதை!’’ என்று ஒரு புன்னகையோடு பதில் சொன்னது.

ஆம். நாம் எதையும் சாந்தமும், அன்பும் மேலிடச் சொல்லும்போதும், செய்யும்போதும் இலக்கை அடைவது எளிதாகும். வாழ்வு குறுகியது. என உணர்ந்து, கோபத்தை அடக்கி, பிறரை மன்னித்து, அன்புடன் வாழ்வோம். நண்பர்களையும் குடும்பத்தினரையும் உறவுகளையும் மகிழ்விப்போம். பிறரைப் புண்படுத்தியிருந்தால் மனதார மன்னிப்புக் கேட்போம். அதேநேரம், பிறர் நம்மைப் புண்படுத்தியிருந்தால் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன் என அவர்களிடம் சொல்வோம். குறைசொல்வதைத் தவிர்த்து நன்றியுடன் நடக்கவும், காழ்ப்புணர்வை விலக்கி, தீமைக்குப் பதில் நன்மை செய்யவும், பகைமையைத் தவிர்த்து மன்னிப்புடன் வாழவுமே, இத்தவக்காலத்தில் திருத்தந்தையும் நம்மைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.