2017-04-03 17:24:00

தேர்ந்தெடுப்போம், கல்லறை அருகிலா, இயேசுவின் அருகிலா என...


ஏப்.,03,2017. 2012ம் ஆண்டின் நிலநடுக்கத்தால் இத்தாலியில் பாதிக்கப்பட்ட கார்பி பகுதிக்கு இஞ்ஞாயிறன்று ஒரு நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்த திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மக்களும், இடிபாடுகளிலிருந்து மேலெழுந்து, பொறுமை நிறை நம்பிக்கையுடன் அனைத்தையும் கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

கார்பி மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றிய வேளையில், இலாசரை, இயேசு உயிர்ப்பித்த இஞ்ஞாயிறு நற்செய்தி குறித்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் கல்லறை பக்கம் நிற்க விரும்புகிறோமா அல்லது இயேசுவின் பக்கம் நிற்க விரும்புகிறோமா என்ற கேள்வியை எழுப்பினார்.

சோகத்தால் மூடப்பட சிலர், தங்களையே இறைவனின் அருளுக்கு அனுமதிக்கும் வேளையில், கார்பி நகர் மக்களைப்போல், இடிபாடுகளிலிருந்து வெளிவந்து, நம்பிக்கையுடன் வருங்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கடந்த காயங்களையோ, கசப்புணர்வுகளையோ, நாம் செய்த பாவங்களையோ குறித்த துன்ப உணர்வுகள், நம் மனதிற்குள், சிறு கல்லறைகளாக இருக்கும் வேளையில், அவற்றின் அருகில், சோகத்துடன் அமர்ந்திருக்கப்போகிறோமா, அல்லது, இயேசுவை அழைத்து, அவர் துணையுடன் வெளிவரப்போகிறோமா, என்ற கேள்வியையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எல்லாமே நமக்கு தவறாக நடக்கின்றன என நம்மையே முடக்கிக் கொள்ளாமலும், நமக்கு நடப்பவை குறித்து மனந்தளர்ந்து, அச்சத்திற்கு நம்மை இழந்துவிடாமலும், தனிமையில் வாழும் சோதனைக்கு நம்மை சிறைப்படுத்தாமலும், இயேசுவில் நம்பிக்கைக்கொண்டு, அவரைச் சந்தித்து புதிய வாழ்வுக்கு நம் கல்லறைகளைத் திறப்போம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் நண்பரின் இறப்பு குறித்து கண்ணீர் விட்டு அழுத இயேசுவைப்போல், இறைவனும், தீமைக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், அத்தீமையால் துன்புறும் மக்களுக்கு வெகு அருகாமையில் இருந்து, அவர்களோடு துன்புற்று, அதன் வழியாக, அவர்களை விடுவிக்கிறார் என்று தன் மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.