2017-04-03 16:42:00

தவக்காலச் சிந்தனை.. மனங்கள் உயரட்டும்


போதும் என்ற மனமே பொன் போன்றது என்ற சொல் வழக்கு, நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தும், நம் மனங்களில் திருப்தி என்பது, பல நேரங்களில் நமக்கு கைகூடாத ஒன்றாகிறது. புலம்பல் ஆகமங்கள் நம் வாழ்வில், அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இஸ்ரயேல் மக்களும், பாலை நிலத்தில், புலம்பினார்கள். இறைவனின் வியத்தகு செயல்களை மறந்து, அர்த்தமற்ற சுக போக வாழ்க்கைக்காக புலம்பி, தங்களை அழிவுக்கு இட்டுச்சென்றார்கள்.

நமது மனங்களில், எழும் புலம்பல்களை உற்று கவனிப்போம். எதிர்பார்ப்புகள் அதிகமானால், ஏமாற்றங்கள் அதிகமாகும். நன்றி மறந்திடும் நிலையும், தன்னலம் பேணும் வாழ்வு முறையும், திருப்தியடையா மனமும், புலம்பல்களின் ஊற்றுகள். உயர்த்தப்பட்ட வெண்கல சிலையால் நலமடைந்த இஸ்ரயேல் மக்கள்போல, நம் மனங்கள் உயர்த்தப்படட்டும். சிற்றின்ப நாட்டங்களிலிருந்து, உயர்வான எண்ணங்களோடு நம் மனங்கள்  உயர்த்தப்படட்டும். நாம் உயர்வடைவதோடு அல்லாமல், நம்மை காண்போரும், நம்மோடு பழகுவோரும், தங்கள் வாழ்வை உயர்த்திக்கொள்ளட்டும். மேன்மையான, உயர்ந்த எண்ணங்களை கொண்ட மனதில், புலம்பல்களுக்கு இடமும், நேரமும் இருப்பதில்லை. உயர்ந்த, நேரிய, எண்ணம் கொண்ட மனங்களை ஆண்டவர் உயர்த்துகிறார்.

மனங்கள் உயர்ந்தால், புலம்பல் குறையும்.

(அ.சகோ.இராஜ சேகரன் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.