2017-03-31 15:46:00

திருத்தந்தையின் எகிப்து பயணத்தின் இலச்சினை வெளியீடு


மார்ச்,31,2017. "அகந்தை கொண்ட உள்ளத்துடன், உண்ணாநோன்பு மேற்கொள்வது, நன்மையைவிட அதிக தீமையை விளைவிக்கும். தாழ்ச்சியே நமது முதல் உண்ணாநோன்பாக அமையவேண்டும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், ஏப்ரல் 28, 29 ஆகிய இருநாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்தில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூது பயணத்தையொட்டி, எகிப்து தலத்திருஅவை, ஓர் இலச்சினையை, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

எகிப்து நாட்டின் அடையாளங்களான நைல் நதி, பிரமிடுகள், பிறைச்சந்திரன், ஆகியவற்றுடன், சிலுவை, திருத்தந்தையின் உருவம் மற்றும் அமைதியைக் குறிக்கும் வெண்புறா ஆகிய அடையாளங்களும் இந்த இலச்சினையில் இடம்பெற்றுள்ள அம்சங்களாக விளங்குகின்றன.

நீல நிற பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலச்சினைக்குக் கீழ், "அமைதியின் எகிப்து நாட்டில், அமைதியின் திருத்தந்தை" என்ற வார்த்தைகள், இத்திருத்தூது பயணத்தின் விருதுவாக்காக பொறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.