2017-03-30 14:20:00

குடும்பங்களின் உலக மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி


மார்ச்,30,2017. குடும்பங்களின் 9வது உலக மாநாட்டிற்கு, டப்ளின் உயர் மறைமாவட்டம் தனிப்பட்ட ஏற்பாடுகளை செய்தாலும், கத்தோலிக்க உலகெங்கும் உள்ள அனைத்து மறைமாவட்டங்களும், குடும்பங்களும் இந்த மாநாட்டிற்கென தயாரிப்பது முக்கியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அயர்லாந்து நாட்டின், டப்ளின் (Dublin) நகரில் நடைபெறவிருக்கும் குடும்பங்களின் 9வது உலக மாநாட்டிற்கு, திருத்தந்தை உருவாகியுள்ள செய்தியை, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு பேராயத்தின் தலைவர், கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல் (Kevin Joseph Farrell) அவர்கள் மார்ச் 30, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் வெளியிட்டபோது, செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

நற்செய்தி, உலகம், குடும்பம் என்ற மூன்று உண்மைகளும், ஒன்றோடொன்று பிணைந்துள்ளதை, திருத்தந்தையின் செய்தி சிறப்பாக விளக்குகின்றது என்று, கர்தினால் ஃபாரெல் அவர்கள் எடுத்துரைத்தார்.

குடும்பங்களின் 9வது உலக மாநாட்டை ஒருங்கிணைக்கும் டப்ளின் பேராயர், Diarmuid Martin அவர்கள், திருத்தந்தையின் செய்தி வெளியிடப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், கத்தோலிக்கக் குடும்பங்களும், திருஅவையும் தன்னில் தானே நிறைவு காண்பதை விடுத்து, காயப்பட்ட மனுக்குலத்தைத் தேடிச் செல்லவேண்டும் என்று திருத்தந்தை அடிக்கடி கூறிவந்துள்ளதை, தன் செய்தியில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்று சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.

டப்ளின் நகரில் நடைபெறும் குடும்பங்களின் உலக மாநாடு, வெறும் கொண்டாட்டம் என்ற அளவில் நின்றுவிடாமல், குடும்பங்களைக் குறித்த நம் மறைக்கல்வி அறிவை வளர்த்துக்கொள்ளும் தருணமாகவும் அமையும் என்று, பேராயர் மார்ட்டின் அவர்கள் குறிப்பிட்டார்.

2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 21ம் தேதி முதல், 26ம் தேதி நடைபெறவிருக்கும் குடும்பங்களின் 9வது உலக மாநாட்டிற்கு,  "குடும்பத்தின் நற்செய்தி: உலகின் மகிழ்வு" மையக்கருத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.