2017-03-30 14:15:00

இரக்கத்தின் சாட்சிகளாக குடும்பங்கள்- திருத்தந்தையின் அழைப்பு


மார்ச்,30,2017. 'தயவுசெய்து', 'நன்றி' 'நான் வருத்தப்படுகிறேன்' என்ற வார்த்தைகளின் பயன்பாடு நம் குடும்பங்களில் வளர்ந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்ற தன் விருப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க உலகினருக்கு எழுதியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 21ம் தேதி முதல், 26ம் தேதி முடிய, அயர்லாந்து நாட்டின், டப்ளின் (Dublin) நகரில், குடும்பங்களின் 9வது உலக மாநாடு நடைபெறவிருப்பதையொட்டி, திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி, மார்ச் 30, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்டது.

"குடும்பத்தின் நற்செய்தி: உலகின் மகிழ்வு" என்ற மையக்கருத்துடன், குடும்பங்களின் உலக மாநாடு நடைபெறும் என்பதை இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, 'அன்பின் மகிழ்வு' என்ற தலைப்பில் தான் வெளியிட்ட திருத்தூது அறிவுரை மடலை, குடும்பங்கள் வாசித்து, சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

விவிலியம் இவ்வுலகிற்கு தொடர்ந்து மகிழ்வைத் தருகிறதா? குடும்பம் இவ்வுலகிற்கு நற்செய்தியாக தொடர்ந்து விளங்குகிறதா? என்ற கேள்விகளை, தன் செய்தியில் எழுப்பியுள்ள திருத்தந்தை, இவ்விரு கேள்விகளுக்கும், 'ஆம்' என்ற பதிலை ஆணித்தரமாகக் கூறித்யுள்ளார்.

நாம் அண்மையில் சிறப்பித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலியைத் தொடர்ந்து, இரக்கம் வெளிப்படும் மிகச் சிறந்த சாட்சிகளாக குடும்பங்கள் விளங்குவதை தான் விரும்புவதாகவும், குடும்பங்கள் இரக்கத்தின் அடையாளங்கள் என்பதை டப்ளின் மாநாடு மீண்டும் நிலைநாட்டும் என்பதை தான் நம்புவதாகவும் திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

தன்னைப்பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கியிராமல், வெளியேறிச் செல்லும் திருஅவை, காயப்பட்டவர்களைக் கண்டு, கடந்துசெல்லாமல் இரக்கம் காட்டும் உள்ளம் கொண்டிருக்கவேண்டும் என்பதே, திருஅவையைக் குறித்து தான் காணும் கனவு என்பதையும் திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பங்களின் உலக மாநாட்டிற்காக உழைக்கும் அயர்லாந்து மக்களுக்காகவும், குறிப்பாக, டப்ளின் மக்களுக்காகவும் தான் சிறப்பாக செபிப்பதாகவும், நாசரேத்து குடும்பம் இம்மாநாட்டின் பணிகள் அனைத்தையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை இச்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.