2017-03-29 16:52:00

மிகக் குறைந்த வயதில் புனிதர் பட்டம் பெறும் தனிப்பெருமை


மார்ச்,29,2017. பாத்திமா அன்னையின் நூற்றாண்டு நிறைவு சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், அன்னையின் காட்சியைக் கண்ட அருளாளர்கள் பிரான்சிஸ்க்கோ, ஜசிந்தா இருவரும் புனிதர்களாக உயர்த்தப்பட்டால், இந்த நூற்றாண்டு விழா முழுமை பெறும் என்று, Leiria-Fatima மறைமாவட்டத்தின் ஆயர், António Augusto dos Santos Marto அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மார்ச் 23, கடந்த வியாழனன்று, அருளாளர்கள் பிரான்சிஸ்கோ, ஜசிந்தா இருவரின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்விரு சிறாரையும் புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்ததைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட ஆயர், Santos Marto அவர்கள், இவ்விருவரையும் புனிதராக உயர்த்தும் நாளையும், திருத்தந்தை விரைவில் அறிவிப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

10 வயது நிறைந்த பிரான்சிஸ்கோவும், 9 வயது நிறைந்த ஜசிந்தாவும் புனிதர்களாக உயர்த்தப்படும்போது, கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரைத் துறந்த குழந்தை மறைசாட்சிகள் அல்லாமல், திருஅவையில், மிகக் குறைந்த வயதில் புனிதர் பட்டம் பெற்றவர்கள் என்ற பெருமையை இவர்கள் இருவரும் பெறுவர் என்று, ஆயர் Santos Marto அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏப்ரல் 20ம் தேதி, வத்திக்கானில், கர்தினால்களின் கூட்டம் நடைபெறும் வேளையில், பாத்திமா அன்னையைக் காட்சி கண்ட இரு அருளாளர்களின் புனிதர் பட்ட தேதியை திருத்தந்தை அறிவிக்கக்கூடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதுவரை பொறுமையுடன் காத்திருப்பதே சிறப்பு என்றும், ஆயர் Santos Marto அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.