2017-03-29 16:59:00

சிறைப்பட்டோரை வரவேற்கும் இந்தியத் தலத்திருஅவை


மார்ச்,29,2017. சிறைப்பட்டோர் மீது கருணை காட்டுவதிலும், அவர்களை வரவேற்பதிலும், கத்தோலிக்கத் திருஅவை, எப்போதும் அக்கறை காட்டி வந்துள்ளது என்று, இந்திய ஆயர் பேரவையின் சிறைப்பட்டோர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அண்மையில் நிறைவுற்ற இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, சிறைப்பட்டோருக்கு ஆற்றக்கூடிய பணிகள் மீது, இந்தியத் தலத்திருஅவையின் கவனத்தை பெருமளவு திருப்பியுள்ளது என்று கூறிய ஆயர் ரெமிஜியூஸ் அவர்கள், சிறைப்பட்டோரின் விடுதலைக்காக மட்டமல்லாமல், அவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைக்கும் முயற்சிகளிலும் இந்திய ஆயர் பேரவையின் சிறைப்பட்டோர் பணிக்குழு ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.

கடந்த ஆண்டு பரிதாபாத் என்ற இடத்தில், பேராயர் குரியாக்கோஸ் பரணிகுலங்கரா அவர்கள், புனித வியாழனன்று சிறைக்கைதிகளின் காலடிகளைக் கழுவிய வேளையில், கூட்டத்திலிருந்த ஒரு கைதி, 13வது நபராக அங்கு வந்து, ஆயரிடம் விண்ணப்பித்ததையடுத்து, அவரது காலடிகளையும் பேராயர் கழுவினார் என்ற நிகழ்வை எடுத்துரைத்த ஆயர் ரெமிஜியூஸ் அவர்கள், கத்தோலிக்க திருஅவை கைதிகளை வரவேற்க தயங்கியதில்லை என்று கூறினார்.

1986ம் ஆண்டு இந்தியாவில் துவக்கப்பட்ட சிறைப்பட்டோர் பணியில், தற்போது 6000த்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர் என்றும், வருகிற மே மாதம் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஒரு பயிற்சி பாசறை வழியே இன்னும் பலரை இப்பணியில் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் பீதேஸ் செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.