2017-03-28 14:29:00

முறையீடு ஏதுமின்றி, வாழ்வை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள அழைப்பு


மார்ச்,28,2017. இயேசுவில் நம்பிக்கை கொள்வது என்பது, எவ்வித முறையீடும் இன்றி, வாழ்வை அப்படியே மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதில் அமைந்துள்ளது என்று, இச்செவ்வாய் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

38 ஆண்டுகளாக உடல்நலமற்று, எருசலேமின் பெத்சதா குளத்தருகே, நலம்பெற வேண்டி காத்திருந்த மனிதரைக் குறித்து இச்செவ்வாயன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியை மையப்படுத்தி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, 'நலம்பெற விரும்புகிறீரா?' என்று அம்மனிதரை நோக்கி இயேசு கேட்ட கேள்வியையும், தனக்கு உதவ யாருமில்லை என்று அவர், பிறர்மீது சுமத்தியக் குற்றச்சாட்டையும் குறித்து, தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

தனக்கு முன் சென்று குணம்பெறுவோரைக் குறித்தும் முறையிடும் அம்மனிதர், இயேசு குணமளித்ததும், அவர் யார் என்பதை அறிந்துகொள்ளவோ, அவருக்கு நன்றி சொல்லவோ முயலவில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் பாவத்தில் முடங்கிக்கிடக்கும் வேளையில், 'எழுந்து நட' என்று இயேசு கூறுவதற்குச் செவிமடுக்காமல், நம் குறைகளிலேயே வீழ்ந்துகிடக்கிறோம் என்று கூறினார்.

நம் வாழ்வை, அதன் நிறைகுறைகளோடு ஏற்றுக்கொண்டு, மகிழ்ச்சியுடன் நடைபோட அழைப்பு விடுக்கும் இயேசு, அதற்குரிய சக்தியையும் வழங்குவார் என்று தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.