2017-03-27 16:16:00

வாரம் ஓர் அலசல் – வாழ்க வளர்க வளமுடன்!


மார்ச்,27,2017. “வாழ்க்கை ஒரு விசித்திரமான தேர்வு. அத்தேர்வில், அடுத்தவரைப் பார்த்து எழுதுவதால்தான் பலர் அதில் தோல்வியடைகிறார்கள். காரணம், ஒவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித்தாள்”. “என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. கோபம்தான் என்னைத் தோற்கடித்தது”. இந்தக் கூற்றுகளை, வாட்சப் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இவற்றை வாசித்தபோது, வாழ்க்கையில், பல தடைகளைத் தாண்டி, கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், வெற்றிச் சிகரத்தை எட்டிய பலர் நினைவுக்கு வந்தனர். சிறு வயதில் மனநிலை பாதித்த மாணவன் என ஒதுக்கி வைக்கப்படல், வாரத்திற்கு குறைந்தது 100 மணி நேரம் வேலை, கண்டுபிடிப்பில் ஆயிரம் முறை தோல்வி... இப்படி வாழ்க்கையில் பல நிலைகளில் அடிபட்டு, பார் புகழும் அறிவியலாளராக உயர்ந்து நிற்கும் தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன் போன்றவர்கள் ஒருபுறம். பள்ளிப் பருவத்திலே அறிய கண்டுபிடிப்புகளால் அசத்தும் மாணவர்கள் இன்னொரு புறம்.  சாதாரண ஒரு வேலையில் சேர்ந்து, தொழிலதிபர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மற்றொரு புறம். மன்னார்குடி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், ஜெயப்பிரியா, வெண்ணிலா, வசந்தராதேவி, பிரீத்தி, குருபிரசாத் ஆகியோர், செயற்கைக்கோள் தயாரிப்பில், மாணவர்கள் பங்களிப்பு என்று, தேசிய அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள், புவி வெப்பமயமாவதைத் தடுப்பதற்கு உதவும், நுண்கிருமியைக் கண்டுபிடித்துள்ளனர்.  

தெலுங்கானா மாநிலம், போதன் நகரத்தைச் சேர்ந்தவர் நாற்பது வயது நிரம்பிய ஸ்ரீகாந்த். இவரது குடும்பத் தொழில் விவசாயம். குடும்பம், அதிகளவில் கடன்பட்டிருந்ததால், இவர், பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்ல முடிவு எடுத்தார். பெங்களூரு புறநகர்ப் பகுதியான நெலமங்களம் கிராமத்தில், இவருக்குத் தெரிந்த ஒருவரின் பூப் பண்ணையில், தினமும் 18 முதல் 20 மணிநேரம்வரை வேலை செய்தார் இவர். இதனால், பூச்செடி வளர்ப்பு, சாகுபடி,  அறுவடை, வணிகம், ஏற்றுமதிகள் போன்றவை பற்றிய எல்லா நுட்பங்களையும் இவர் கற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் சென்று, தான் சேமித்து வைத்திருந்த பன்னிரெண்டாயிரம் ரூபாயுடன், தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சிறிது கடன் பெற்று, இருபதாயிரம் ரூபாய் முதலீட்டுடன், தனது பதினெட்டாவது வயதில், சொந்தமாக ஒரு சிறிய சில்லறை பூ வணிகத்தைத் தொடங்கினார் ஸ்ரீகாந்த். இதற்கு, குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு இருந்தது. ஆனால், ஸ்ரீகாந்த் அவர்கள், தனது உள்மனது சொல்வதன்படி நடக்க முடிவுசெய்து, தனது திட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்துச் சென்றார்.

பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள, அவரது வீட்டில், 200 சதுர அடி இடத்தில், ‘ஓம் ஸ்ரீ சாய் பிளவர்ஸ்' என்ற பெயரில் ஒரு பூக் கடையைத் தொடங்கினார் ஸ்ரீகாந்த். பூ பண்ணையில் வேலை செய்த அனுபவமும், இரண்டு ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த தொடர்புகளும், அவரின் புதிய வணிகத்திற்கு உறுதுணையாக அமைந்தன. நாளுக்கு நாள் அவரது வாடிக்கையாளர் பட்டியல் பெரிதாகியது. முதல் ஆண்டிலேயே, ஐந்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்தை அடைந்தார். அடுத்த ஆண்டில் அவரது வருமானம் இரட்டிப்பானது. அவரது இருபத்தைந்தாவது வயதில், ஆண்டு வருமானம் ஐந்து கோடி ரூபாயை எட்டியது. பூச்செடி சாகுபடி பற்றி அறிந்து கொள்வதற்காகவும், அவரது பண்ணைகளில் பயன்படுத்தும், புதிய பண்ணை நுட்பங்களைத் தெரிந்துகொள்வதற்காகவும், இதுவரை இருபதுக்கும் அதிகமான நாடுகளுக்கு ஸ்ரீகாந்த் சென்றுள்ளார். தற்போது, ஸ்ரீகாந்தின் பண்ணைகளிலும், வில்சன் தோட்டத்திலுள்ள அவரது அலுவலகத்திலும், 300 பேர் வரை வேலை செய்கின்றனர். அவரது பண்ணையில் வேலைசெய்யும் ஏறக்குறைய எண்பது பேருக்கு, உணவும், தங்குமிட வசதியும் வழங்குகிறார். தனது சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்று, "ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஏக்கம்தான் தனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஸ்ரீகாந்த். மேலும், மனிதன் என்ற இணையத்தில், தொழிலதிபர் முஸ்தபா பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருந்தது. முஸ்தாபா தோசை, இட்லி பாக்கெட் மாவு என்றால் சென்னை, மும்பை, டெல்லி, துபாய் போன்ற இடங்களில் புகழ்பெற்றது. இவரது தந்தை நான்காவது மட்டுமே படித்த கூலித் தொழிலாளி. கேரளாவைச் சேர்ந்த இவர், தன் வாழ்வு பற்றி இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

எனக்கு சிறு வயது முதலே படிப்பு வரவில்லை. ஆறாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர் எனது கணக்கு ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தால் மீண்டும் ஆறாம் வகுப்பில் சேர்ந்து, கடுமையாகப் படித்து முதல் மாணவனாக வந்தேன். பத்தாம் வகுப்பிலும் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். பள்ளிப்படிப்புக்கு பின்னர் படிக்க வசதியில்லை. அரசு செலவில் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அதில் நன்றாகத் தேர்ச்சி பெற்ற எனக்கு, Motorola நிறுவனத்தில் பெரிய வேலை கிடைத்தது. வெளிநாட்டில் வேலை செய்து சேர்த்த பதினைந்து இலட்சம் ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்தேன். இட்லி, தோசை மாவுகளை, பாக்கெட்டில் தயாரிக்கும் தொழில் தொடங்குவது பற்றி என் உறவினர் ஒருவர் ஆலோசனை சொன்னார். 25,000 ரூபாய் முதலீடு போட்டு, நான்கு உறவுக்கார ஆண்களை உடன்சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்கினேன். 550 அடி கொண்ட சிறிய அறையில் இரண்டு கிரைண்டர்கள், ஒரு மிக்சியுடன் தொடங்கினோம். தற்போது ஐம்பதாயிரம் கிலோ மாவு தயாரிக்கிறோம். நூறு கோடி ரூபாய் இலாபம் வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரத்துடன், ஐந்தாயிரம் ஊழியர்களை, பணியில் அமர்த்துவதே எங்கள் இலக்கு.

இவ்வாறு கூறுகிறார் முஸ்தபா. ‘வாழ்க்கையில், முன்னேறுவதற்கு, பல படிகள் ஏறி, பல பயணங்களை மேற்கொள்ளவும், பல துன்பங்களைச் சந்திக்கவும் வேண்டியுள்ளது. ஆனால் கடின உழைப்பும், விடாமுயற்சியும், மனத்துணிவும் இருந்தால், யார்தான் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாது! வாழ்வில் வெற்றியடைய, பெரியோர் மூன்று காரியங்களைப் பரிந்துரைக்கின்றனர் ஒன்று, நல்ல ஆசிரியர். இரண்டாவது, நல்ல ஆலோசனை, மூன்றாவது நம்பிக்கை. கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை முதலீடு செய்யும் முறைகள் தெரிந்திருக்க வேண்டும் என்றும், நல்ல ஆசிரியரின் உதவியால், எவ்வாறு சிறந்த மாணவராக உருவாக முடிகிறதோ, அதைப்போல, நல்ல நிதி ஆலோசகர் கிடைத்தால், நம் வாழ்க்கையை வளமாக்கவும் முடியும், செல்வர் ஆகவும் முடியும் என பெரியோர் சொல்கின்றனர். மேலும், நம்பிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும் எனவும் சொல்கின்றனர். மொத்தத்தில், வாழ்க்கையில் உய்வுபெற, விடாமுயற்சி கட்டாயம் தேவை. 97 வயதில், எம்.ஏ. பொருளாதாரம் படிக்கும் ராஜ்குமார் வைஷ்யா என்பவர் பற்றி, இம்மாதம் 17ம் தேதி ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பீஹார் மாநிலத்திலுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில், 2015ம் ஆண்டில், எம்.ஏ. பொருளாதாரம் படிப்பதற்கு, தனது பெயரை இவர் பதிவு செய்துள்ளார். இந்தியாவில், மிக வயதான மாணவர் என்று, லிம்கா சாதனை புத்தகம், இவரை அங்கீகரித்துள்ளது. ராஜ்குமார் வைஷ்யா அவர்கள் சொல்கிறார்..

1940ம் ஆண்டில் ஆக்ரா பல்கலைக்கழகத்தில், சட்டப்படிப்பில் பட்டம் பெற்றேன். குடும்பப் பொறுப்பு காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. ஆயினும், முதுநிலை பட்டம் பெற வேண்டும் என்று, எனக்குள்ளிலிருந்த தணியாத தாகமும், வறுமை போன்ற பிரச்சனைகளை ஒழிப்பதில் இந்தியா ஏன் தோல்வியடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளும் ஆர்வமுமே, நான் எம்.ஏ. பொருளாதாரம் படிப்பதற்குக் காரணமாக அமைந்தன.

97 வயதான ராஜ்குமார் அவர்கள் உத்தரபிரதேசத்தில் 1920ம் ஆண்டில் பிறந்தார். அன்பர்களே, வாட்சப்பில் இப்படியொரு பகிர்வு வந்திருந்தது. ஒருவர், இறைவா! நான் வாழ்வில் இழந்தது அனைத்தையும் திரும்பத் தா எனக் கேட்டார். அதற்கு இறைவன், நீ இழந்தவை எவை எனக் கேட்டார். கால மாற்றத்தில் இளமையை இழந்தேன், கோலம் மாறி அழகையும் இழந்தேன், வயது ஆக ஆக, உடல்நலம் இழந்தேன்... இப்படி எதையெல்லாமோ இழந்துவிட்டேன் என்றார் அவர். இறைவன் அழகாகச் சிரித்தார். பின் பதில் சொன்னார். கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய், உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய், உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய், நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய், இப்படி சொல்வதற்கு இன்னும் பல உண்டு இவை போல... தரட்டுமா அனைத்தையும் திரும்ப, என்றார் இறைவன். கேட்டவர் திகைத்தார் இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தார். வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும், பேறுதான் என்பதை அறிந்தார். உள்ளத்தில் தெளிவு பெற்றார். இறைவனும் மறைந்தார். அன்பு இதயங்களே, இறைவன் நமக்கு கொடுத்திருப்பவைகளை நினைத்துப் பார்ப்போம். ஒரு தடி, சிலருக்கு ஊன்றுகோல், சிலருக்கு பிறரை அடிக்கும் கருவி, இன்னும் சிலருக்கு, குரைக்கும் நாயை விரட்ட உதவும் கம்பு, ஆனால் மோசே கரத்திலிருந்த தடி, செங்கடலை பிரித்து, இஸ்ரயேல் மக்களை, பாரவோனின் ஆள்களிடமிருந்து காப்பாற்றியது. அதேபோல் விவிலியத்தில் சிறுவன் தாவீதிடம் இருந்த கூழாங்கல், கனரக ஆயுதங்களோடு நின்றிருந்த மாவீரன் கோலியாத்தின் உயிரைப் பறித்தது. எனவே, இறைவன் நம்மை ஆசீர்வதித்துள்ள திறமைகளை, நல்ல விதமாய்ப் பயன்படுத்தி வாழ்வில் வளர்ந்து வளம் பெறுவோம். அவ்வாறு பயன்படுத்தி வளமுடன் வாழ்பவர்களை எடுத்துக்காட்டாய்ப் பின்பற்றுவோம். நம் விடாமுயற்சிக்கு இறைவன் உறுதுணையாக இருக்கின்றார். எல்லாரும், வாழ்க, வளர்க, வளமுடன் என மனதார வாழ்த்துவோம். நம் வாழ்த்து, இரட்டிப்பாக நமக்குத் திரும்பி வரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.