2017-03-27 16:12:00

பழிவாங்கும் எண்ணமற்ற கிறிஸ்தவர்களாய் வாழ அழைப்பு


மார்ச்,27,2017. எவ்வித பகைமை மனப்பான்மைக்கும் இடம்கொடாமல், பழிவாங்கும் எண்ணங்களைக் கைவிட்டு, கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்.

இலண்டன் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிறைவேற்றப்பட்டத் திருப்பலியில், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், 'நானே உலகின் ஒளி' என இயேசு அறிவிப்பதன் வழியாக, ஒளியின் மக்களாக வாழவேண்டும் என நம் ஒவ்வொருவரையும் கேட்கிறார் என்று தன் மறையுரையில் கூறினார்.

ஒரே தந்தையாம் இறைவனின் குழந்தைகளாகிய நாம் அனைவரும், ஒருவரையொருவர் குறைத்து மதிப்பிடாமல், ஒருவருக்கொருவர் தீங்கு நினையாமல், ஒளியின் மக்களாக வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், கர்தினால் நிக்கோல்ஸ்.

அண்மைய இலண்டன் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்காகச் செபிக்கவும் அழைப்பு விடுத்த கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், பழிவாங்கும் எண்ணங்களைக் கைவிட்டு, இரக்கத்தோடும், மன உறுதியோடும் நம்மால் இயன்ற அனைத்து நன்மைகளையும் ஆற்றுவதே ஒளியின் மக்களுக்குரிய அடையாளம் என்றும் எடுத்துரைத்தார்.

இத்தாக்குதலில் இறந்த PC Keith Palmer, Kurt Cochran, Aysha Frade, Leslie Rhodes ஆகிய ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி வேண்டிக்கொண்ட கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இத்தாக்குதலை நடத்தியவரின் ஆன்மா மீதும் இறைவன் கருணை காட்டவேண்டும் என்று செபிப்பதற்கு அழைப்பு விடுத்தார் என ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.