2017-03-27 16:42:00

இதயத்தை கையில் தாங்கி திருத்தந்தைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு


மார்ச்,27,2017. இஸ்பெயின் நாட்டின் Almería எனுமிடத்தில், இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற அருளாளர் பட்டமளிப்பு விழா குறித்து தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இஸ்பெயின் நாட்டின் உள்நாட்டுப்போரின்போது, 1936ம் ஆண்டு,  மறைசாட்சிகளாக  கொல்லப்பட்ட José Alvarez-Benavides y de la Torre என்பவரும், அவரின் உடன் உழைப்பாளர்கள் 114 பேரும் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது, அன்பெனும் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப, நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைசாட்சிகளாக கொல்லப்பட்ட இந்த அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர், இயேசுவிற்காகவும், அமைதியின் நற்செய்திக்காகவும், சகோதரத்துவ ஒப்புரவிற்காகவும் வீரத்துவ சாட்சிகளாக விளங்குகிறார்கள் என்றார் திருத்தந்தை.

தன் மூவேளை செப உரையின் இறுதியில், மிலான் நகர மக்களுக்கு தன் நன்றியையையும் வெளியிட்டார் திருத்தந்தை.

தான் சனிக்கிழமையன்று மேற்கொண்ட திருப்பயணத்தின்போது, மிலான் நகர மக்கள் தங்கள் இதயங்களை கையில் தாங்கியவர்களாக, தனக்கு இன்முக வரவேற்பு அளித்தனர் என உருவக மொழியில் அவர்களை பாராட்டிப் பேசினார் திருத்தந்தை. உரோம் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், ஏறத்தாழ 40,000 பேர் குழுமியிருந்து திருத்தந்தைக்கு செவிமடுத்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.