2017-03-25 13:54:00

மிலான் நகர வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தை வழங்கிய உரை


மார்ச்,25,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, காலை வணக்கம்!

நீங்கள் வழங்கிய வரவேற்பிற்கு மிக்க நன்றி. எனக்களித்த இரு சிறப்பான பரிசுகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறுகிறேன். நீங்கள் அளித்த முதல் பரிசு, அருள்பணியாளர்கள் திருப்பலியில் அணியும் கழுத்துப்பட்டை. இதன் வழியே, நான் இந்த நகருக்கு ஒரு அருள்பணியாளராக வந்திருப்பதை இந்தப் பரிசு குறிக்கிறது. என்னை உங்கள் பங்குத்தந்தை போல வரவேற்றுள்ளீர்கள். மேலும், இந்த கழுத்துப்பட்டை இதே நகரில் பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது, இதனை இன்னும் சிறப்பான ஒரு பரிசாக மாற்றுகிறது.

நீங்கள் எனக்களித்த இரண்டாவது பரிசு, அன்னையின் திரு உருவம். இந்நகருக்குள் நான் நுழைந்ததும், நீங்கள் இந்த பரிசை வழங்கியிருப்பதன் வழியே, அன்னை மரியாவே என்னை வரவேற்பதைப்போல் உணர்கிறேன். தன் உறவினரான எலிசபெத்தை மரியா தேடிச் சென்றதைப்போல, என்னையும் தேடி வந்துள்ளார் என்பதை உணர்கிறேன்.

மிலான் பேராலயத்தில் மேலுள்ள அன்னை மரியாவின் உருவம் புதுப்பிக்கப்பட்டதை இந்த பரிசு உணர்த்துகிறது. அன்னை மரியாவின் உருவம் புதுப்பிக்கப்பட்டதைப்போல, இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ள நம் ஒவ்வொருவரையும் இறைவன் புதுப்பிப்பாராக!

நீங்கள் வழங்கிய இவ்விரு பரிசுகளுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக! அன்னை மரியா பாதுகாப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.