2017-03-25 14:03:00

அருள்பணியாளர், துறவியருடன் திருத்தந்தையின் கலந்துரையாடல்


மார்ச்,25,2017. Gabriele Gioia என்ற அருள்பணியாளர் எழுப்பிய கேள்விக்கு, திருத்தந்தையின் பதில்:

என் மனதில் தோன்றும் முதல் எண்ணம், 'சவால்' என்ற சொல். திருஅவை தான் கடந்துவந்த ஒவ்வொரு யுகத்திலும், சவால்களைச் சந்தித்துள்ளது. ஒரு சமுதாயம் வாழ்வுத் துடிப்புடன் இருக்கிறது என்பதற்கு, சவால்கள் சிறந்த அடையாளங்களாக உள்ளன.

'பன்முகச் சமுதாயம்' என்பது, அடுத்த எண்ணம். இதுவும், திருஅவை வரலாற்றில் தொடர்ந்துவரும் ஓர் அம்சம். உலகெங்கும் பரவியுள்ள திருஅவையின் பல்வேறு மறைமாவட்டங்கள், துறவு சபைகள், மக்கள் சமுதாயங்கள் அனைத்தும், திருஅவையின் பன்முகக் கலாச்சாரத்தின் அடையாளங்கள்.

இந்த வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதில், அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, ஒரே வகை கருத்தியலுக்குள் கொணர முயல்வது, திருஅவையின் அழகைக் குறைக்கும். வேறுபாடுகள் நிறைந்த இச்சூழலில், 'தேர்ந்து தெளிதல்' என்ற பண்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைப் பருவம் முதல், 'தேர்ந்து தெளியும்' பண்பை நாம் அனைவரும் வளர்த்துக்கொண்டால், உலக வாழ்விலும், திருஅவை வாழ்விலும் பயன்கள் பெற முடியும்.

தியாக்கோன் Roberto Crespi அவர்களின் கேள்விக்கு, திருத்தந்தையின் பதில்:

தியாக்கோன்கள், திருஅவைக்கு ஏராளமான நன்மைகளைச் செய்யமுடியும். மக்களுக்கும், அருள்பணியாளர்களுக்கும் இடையில் உள்ளவர்களாக மட்டும் தியாக்கோன்களை எண்ணிப்பார்க்கக் கூடாது. 'தியாக்கோன்' என்பது, திருஅவையில், தனிப்பட்ட ஓர் அழைப்பு. அதன் மையக்கருத்து, பணிசெய்தல். திருவழிபாடு, செபங்கள், பிறரன்புப்பணிகள், குடும்பம், துறவறம் என்ற பல வழிகளில், திருஅவையில் காணப்படும் நம்பிக்கை வெளிப்படுவதுபோல், பணிவாழ்வின் வழியாகவும் வெளிப்படுகிறது என்பதை, 'தியாக்கோன்' அழைப்பு சுட்டிக்காட்டுகிறது.

இப்பணியை, ஏதோ இயந்திரத்தனமான பணியாக எண்ணிப்பார்க்கக் கூடாது. மாறாக, குடும்பங்களில், இறைமக்கள் நடுவில், பணியாளராக அழைக்கப்படுவதை ஒரு தனி வரமாகக் கருதவேண்டும்.

'தியாக்கோன்' அழைப்பு என்பது, பீடப் பணியாளர் போன்ற அழைப்பு அல்ல; மாறாக, திருஅவையில், தேவையில் உள்ள வறியோர் நடுவிலும் ஆற்றவேண்டிய பணிக்கு இது ஓர் அழைப்பு.

Paola Paganoni என்ற அருள்சகோதரி எழுப்பிய கேள்விக்கு, திருத்தந்தையின் பதில்:

'சிறுபான்மையினர்' என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டுப் பேச விழைகிறேன். துறவியர், 'சிறுபான்மையினர்' என்று சொல்லும்போது, ஒருவகை ஆற்றாமையும், ஆதங்கமும் நம் உள்ளங்களை முடக்கிப் போடுகின்றன. இத்தகைய உணர்வுகள் நம்மைச் செயலிழக்கச் செய்கின்றன. இவ்வேளைகளில், துறவு சபைகளின் ஆரம்பக் காலத்தை, அப்போது விளங்கிய ஆர்வத்தை, துடிப்பை நினைவில் கொள்வது நல்லது.

ஒவ்வொரு துறவு சபையையும் நிறுவியவர்கள், தங்கள் சபை, ஒரு கூட்டத்தின் பகுதி என்று எண்ணியதில்லை; மாறாக, ஒவ்வொரு சபைக்கும் தனிப்பட்ட அழைப்பும், வரமும் உண்டு என்பதை அவர்கள் எண்ணியதால், அச்சபைகளை நிறுவினர்.

துறவு சபைகள், திருஅவையில் புளிக்காரமாக, உப்பாக, ஒளியாக செயல்பட அழைப்பு பெற்றுள்ளன. இன்றைய உலகில் புளிக்காரமாக, உப்பாக, ஒளியாகச் செயலாற்றுவது எவ்விதம் என்பதை துறவு சபைகள், மீண்டும் ஒருமுறை கண்டுபிடிக்க வேண்டும்.

புளிக்காரமோ, உப்போ, ஒளியோ, சிறு அளவில், 'சிறுபான்மையினராக' இருந்தாலும், அவை, முழு சமுதாயத்தையும் உயிர் துடிப்புடன் வாழ்வதற்கு உதவி புரிகின்றன.

துறவு சபைகள், தங்களை மக்கள் மத்தியில் முன்னிறுத்தாமல், கிறிஸ்துவை மக்கள் மத்தியில் முன்னிறுத்தி, வாழ வைத்தால், தங்கள் சபைகள் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடைந்த மகிழ்வில் வாழ முடியும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.