2017-03-23 16:51:00

மார்ச் 24 - மறைசாட்சிகளாக உயிரிழந்தோர் நாள்


மார்ச்,23,2017. மறைபரப்புப்பணியில் மறைசாட்சிகளாக உயிர் நீத்தோர் நினைவு நாள், மார்ச் 24ம் தேதி, வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் வேளையில், இந்நாளின் மையக் கருத்தாக, "அஞ்சாதீர்" என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது.

சான் சால்வதோர் பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, திருப்பலியாற்றிய வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், 1993ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24ம் தேதி, மறைபரப்புப்பணியில் மறைசாட்சிகளாக உயிர் நீத்தோர் நினைவு நாள், சிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாண்டு, 25வது முறையாகக் கொண்டாடப்படும் இந்நாளை, இத்தாலிய பாப்பிறை மறைபரப்புப்பணிக் கழகம் ஒருங்கிணைக்கிறது.

"அஞ்சாதீர்" என்ற சொல்லால் உயிர்த்த இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய உறுதி, கடந்த 20 நூற்றாண்டுகளாக, துன்பங்களைத் தாங்கிய ஒவ்வொரு மறைசாட்சியின் உள்ளத்திலும் பதிந்து, வழிநடத்தியுள்ளது என்று, பாப்பிறை மறைபரப்புப்பணிக் கழகம் கூறியுள்ளது.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் இந்த நினைவுநாளன்று, சிரியாவில், கடந்த 6 ஆண்டுகளாக, உள்நாட்டுப் போரினால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுக்கூருமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.