2017-03-23 15:14:00

தவக்காலச் சிந்தனை : திரும்பி வா! திருந்தி வா!


கடந்த காலங்களில் நடந்த பாதைகள், நம்மைத் தடுமாறச் செய்திருக்கலாம். சந்தர்ப்பச் சூழல்கள், நம்மை நிறமாற்றியிருக்கலாம். நமது வாழ்வில், சில கறைகள் படித்திருக்கலாம். எதார்த்தமான நம் நடத்தைகளில், ஏமாற்றங்கள் வந்திருக்கலாம். எங்கே கடவுள் என்ற கேள்விகளும், நம்மைக் கேட்டிருக்கலாம். இன்று, இயேசு விடுக்கும் அழைப்பு, மகனே, மகளே, திரும்பி வா, மனம் திருந்தி வா. சந்தேகப் பார்வைகள் நம்மிடம் வளர்ந்து நம் உறவு முறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளால்  மனம் குழம்பிய வேளைகளில், இயேசு விடுக்கும் அழைப்பு இது. இறைவனின் வழிகள் நேரானவை. மனிதரால் அறிய இயலாதவை. சிலர், விரும்பத் தகாத நிகழ்வுகளால், கோவிலையே மறந்துவிடுகிறார்கள். இன்னும் சிலருக்கு, வேலையும் வியாபாரமும் இறைவனை விட பெரிதாகி விடுகிறது. புறம் கூறுவதே சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. கட்டுக்கதைகள் உருவாக்குவதில் சிலர் வல்லவர்கள். இறை ஒளி நம்மிடம் மறைய துவங்கும்போது, இவை துளிர் விடுகின்றன. பின், மனத்துயரம், சோதனைகளுக்கு இட்டுச் சென்று, நம் வாழ்வை, தடம் மாற்றி விடுகின்றன. இவையெல்லாம் நம் அனைவரிடமும் இருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள். சிலரின் செப வாழ்வை பொருத்து, இவை, அளவில் மாறுபடுகின்றன. இறையன்பில் பிறரன்பும், பிரன்பில், இறையன்பும் காண மறக்க, மறுக்க, இவைகளே காரணம். எனவே, நம் மனங்களை, புரட்டிப் போடுவோம். திரும்பி இறைவனை நோக்கி நம் பாதைகள் அமையட்டும்.

அடுத்தவருக்குக் குழிவெட்டுவதைத் தவிர்த்து, நம் அடித்தளங்களை ஆழப்படுத்தலாமே! (அ.சகோ.இராஜ சேகரன் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.