2017-03-22 16:27:00

திருத்தந்தையின் மிலான் பயணம் - வறியோருக்கு இல்லங்கள்


மார்ச்,22,2017. "நாம் நம்பிக்கை குறைந்த மனிதர்களாக இருந்தாலும், ஆண்டவர் நம்மை காக்கிறார். ஆண்டவரில் எப்போதும் நம்பிக்கை கொள்வோம்!" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் மார்ச் 22, இப்புதனன்று வெளியாயின.

மேலும், மார்ச் 25ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிலான் நகரில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் வேளையில், புதுப்பிக்கப்பட்ட 55 இல்லங்கள், வறியோருக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் வழங்கப்படும் என்று, மிலான் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இவ்வுயர் மறைமாவட்டத்தின் பிறரன்புப் பணி அமைப்பான, காரித்தாஸ் அம்புரோசியானா (Caritas Ambrosiana) மேற்கொண்ட இப்பணி, இரக்கத்தின் யூபிலி ஆண்டின் தொடர்ச்சியாக உள்ளது என்று, மிலான் பேராயர், கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிலான் நகரில் நிறைவேற்றும் திருப்பலியின்போது, இவ்வில்லங்கள், அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலான் பெருநகராட்சியின் வீட்டுவசதித் துறை, யாரும் தங்கியிராத 55 வீடுகளை காரித்தாஸ் அமைப்பினரிடம் ஒப்படைத்ததையடுத்து, அவ்வில்லங்களைப் புதுப்பிக்கும் பணிகள் துவங்கின என்று, மிலான் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.