2017-03-22 16:43:00

திருத்தந்தை மக்களின் மேய்ப்பர் என்பதைக் கூறும் திருப்பீட அவை


மார்ச்,22,2017. மனித முன்னேற்றத்தை மையப்படுத்தி, உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையில், புலம்பெயர்ந்தோர் பணிகள் என்ற துறையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நேரடி மேற்பார்வையில் வைத்திருப்பது, அவர் மக்களின் மேய்ப்பர் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது என்று, திருப்பீட அதிகாரிகள் இருவர் கூறியுள்ளனர்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் என்ற திருப்பீட அவையின் நேரடிச் செயலர்களான, அருள்பணியாளர்கள், Fabio Baggio, மற்றும், Michael Czerny இருவரும், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில், இப்புதனன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

2013ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லாம்பெதூசா தீவுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டபோது, திருஅவை, புலம்பெயர்ந்தோருக்கு நெருக்கமாக உள்ளது என்று கூறியதை நிறைவேற்றும் ஒரு முயற்சியாக, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் என்ற திருப்பீட அவையை உருவாக்கியுள்ளார் என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நீதி, அமைதிப் பணி அவை, புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணிப்போர் பணி அவை என்று தனித்தனியே செயல்பட்டு வந்த திருப்பீட அவைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய திருப்பீட அவை, முழு மனித முன்னேற்றத்திற்கென பல வழிகளில் செயல்படவேண்டும் என்பதே, திருத்தந்தையின் கனவு என்று இக்கட்டுரையின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவு, வன்முறை என்ற பல அடிப்படை காரணங்களால் உருவாகிறது என்பதை மனதில் கொண்டு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் திருப்பீட அவை பணியாற்றும் என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.