2017-03-22 16:28:00

ஓசூர் மாணவரால் மாரடைப்பை அறிவிக்கும் கருவி கண்டுபிடிப்பு


மார்ச்,22,2017. ஓசூரில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ் அவர்கள், மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

அவருக்கு ‘இராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ (Rashtrapati nava pravartan puraskar) என்ற விருது வழங்கி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கவுரவித்துள்ளார்.

அறிவியல் பாடத்தில் ஆர்வம் கொண்டுள்ள மாணவர் ஆகாஷ் மனோஜ் அவர்கள், பள்ளியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் அறிவியல் சார்ந்த படைப்புகளுக்கு பல விருதுகள் பெற்றுள்ளார்.

மாரடைப்பால் தனது தாத்தா திடீரென உயிரிழந்தது தன்னை மிகவும் பாதித்தது என்று கூறும் மனோஜ் அவர்கள், மாரடைப்பு வருவதை முன்கூட்டியே தெரிந்திருந்தால், சிகிச்சை அளித்து தாத்தாவின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்ற எண்ணமே தனது புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது என்று கூறினார்.

சுமார் 15 முதல் 20 கிராம் எடையுள்ள இந்தக் கருவியை, மாரடைப்பு ஆபத்து உள்ள நோயாளி, கைக்கடிகாரம் போன்று இடது கையில் கட்டிக்கொண்டால், மாரடைப்பு வருவதற்கான அறிகுறியை இந்த கருவி 6 மணி நேரத்துக்கு முன்பே கண்டுபிடித்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் என்றும், இதனால் நோயாளிகள் எச்சரிக்கையடைந்து இருதய நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மாணவர் மனோஜ் அவர்கள், விளக்கமளித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்திலும், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் இந்த கருவியின் செயல்பாடுகள் பரிசோதனை செய்யப்பட்டு இதன் செயல்பாடுகள் குறித்து சான்றளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இந்தக் கருவியை தயாரித்து, அனைவரும் வாங்கி பயனடையும் வகையில் 2018-ம் ஆண்டு இறுதியில் இருந்து, குறைந்த விலையாக ரூ.900-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக மாணவர் மனோஜ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.