2017-03-21 15:33:00

32வது உலக இளையோர் நாளுக்கு திருத்தந்தையின் செய்தி


மார்ச்,21,2017. வருகிற ஏப்ரல் 9ம் தேதி, மறைமாவட்ட அளவில், உலகின் அனைத்து கத்தோலிக்க மறைமாவட்டங்களிலும் சிறப்பிக்கப்படவிருக்கும், 32வது உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தி இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

“வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்” (லூக்.1:49) என்ற தலைப்பில், உலகின் அனைத்து இளையோருக்குமென இச்செய்தியை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழித்து, மற்ற செயல்களில், குறைந்த நேரம் ஈடுபடும் இளையோர் (couch-potatoes) இந்த நம் காலத்திற்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார் என்ற அன்னை மரியின் புகழ் பாடல் வரிகளை விளக்கியுள்ள திருத்தந்தை, இளையோராய் இருப்பதால், கடந்த காலத்திலிருந்து தொடர்பற்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்றும், கடந்த கால நிகழ்வுகளோடு தொடர்பு கொண்டு இருப்பதற்கு, அன்னை மரியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்காலத்தை மட்டுமே மதிக்கும் ஒரு சமுதாயம், திருமண வாழ்வு, அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு, குருத்துவப் பணி போன்ற கடந்த காலத்திலிருந்து பெற்ற எல்லாவற்றையும் ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும், இது, இறுதியில், அர்த்தமற்ற மற்றும், காலத்திற்கு ஒவ்வாத நிலையில் கொண்டுபோய் விடும் என்றும் கூறியத் திருத்தந்தை, இளையோர், இத்தகைய போக்குகளால் ஏமாறாமல் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடவுள் நம் வாழ்வின் எல்லா நிலைகளையும் விரிவுபடுத்தவே வந்தார் எனவும், வருங்காலத்தை, மகிழ்ச்சியோடு சிறப்பாக அமைப்பதற்கு, கடந்த காலத்தை மதிப்பதற்குக் கடவுள் நமக்கு உதவுகிறார் எனவும், உண்மையான அன்பு அனுபவத்தைப் பெற்றால் மட்டுமே இது இயலக் கூடியது எனவும், இந்த அனுபவம், ஆண்டவரின் அழைப்பைத் தேர்ந்து தெளிந்து, அதற்குத் தெளிவான முறையில் பதிலளிக்க உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

வருங்காலத்தை அமைப்பதற்கு, படைப்பாற்றல் திறனை, நம்பிக்கையுடன் பயன்படுத்துமாறும் இளையோரிடம் கூறியுள்ள திருத்தந்தை, 2019ம் ஆண்டில், பானமா நாட்டில் நடைபெறும் உலக இளையோர் தின தயாரிப்புக்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும், இந்த உலக இளையோர் தினத்தின் பாதுகாவலர்களில் ஒருவராகிய புனித மார்ட்டின் டி போரஸ், அன்னை மரியாவிடம் கொண்டிருந்த மகனுக்குரிய பக்தியைப் பின்பற்றுமாறும், இளையோர், அன்னை மரியாவுடன் குடும்ப உறவையும், நட்பையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறும் கூறியுள்ளார் திருத்தந்தை. 

பிரேசிலில் Aparecida அன்னை மரியா திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 300ம் ஆண்டின் நிறைவும், போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில், அன்னை மரியா காட்சி கொடுத்ததன் நூறாம் ஆண்டின் நிறைவும், இந்த 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுவதையும் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.