2017-03-20 16:18:00

ருவாண்டா நிலைகள் குறித்து திருத்தந்தையுடன் ஆலோசனை


மார்ச்,20,2017. இத்திங்களன்று காலை ருவாண்டா அரசுத் தலைவர் Paul Kagame அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையை சந்திக்க, அரசு குழுவினருடன் வந்திருந்த அரசுத் தலைவர் Kagame அவர்கள், திருத்தந்தையை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகளை மேற்கொள்ளும் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

வத்திக்கானுக்கும் ருவாண்டா நாட்டிற்கும் இடையே நிலவும் அரசியல் உறவு, ருவாண்டாவின் தற்போதைய நிலை, அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் பணிகள் ஆகியவை, இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன.

தேசிய ஒப்புரவிற்கும் அமைதிக்கும் தலத் திருஅவை, அரசுடன் இணைந்து ஆற்றிவரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டுட்சி இன மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளின்போது, தலத்திருஅவையின் மௌனத்திற்கும், சில அதிகாரிகளின் விரோத நடவடிக்கைகளுக்கும் தன் வருத்தத்தையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று காலை, அத் லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த எல் சல்வதோர் நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.