2017-03-20 16:09:00

ஒரு தலைமுறையே ஆக்ரமிப்பின்கீழ் வாழ்கிறது, ஆயர்கள் கவலை


மார்ச்,20,2017. கிழக்கு எருசலேம், மேற்குக் கரை (West Bank)  மற்றும் காஸா (Gaza) பகுதிகளின் 50 ஆண்டு கால ஆக்ரமிப்பால் எண்ணற்ற மக்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆக்ரமிப்பின் கீழேயே வாழும் நிலை உருவாகியுள்ளதாக, புனித பூமியின் ஒருங்கிணைப்புக்குழு தன் கவலையை வெளியிட்டுள்ளது.

ஆயர்களை உள்ளடக்கிய இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீனர்கள், மற்றும், இஸ்ராயேலர்களின் மனித மாண்பை மீறும் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு எவரும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீனப் பகுதிகளில் ஏனைய மக்களை குடியமர்த்துவது, பாலஸ்தீனர்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமல்ல, அமைதிக்கான வழிகளை அடைப்பதுமாகும் எனவும் கூறியுள்ளது, பல்வேறு நாடுகளின் கத்தோலிக்க ஆயர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த புனித பூமி ஒருங்கிணைப்புக் குழு.

பாலஸ்தீனமும் இஸ்ராயேலும் அருகருகே அமைதியில் வாழ்வதற்குரிய உரிமையை, தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.