2017-03-18 14:23:00

பாலங்களை அல்ல, சுவர்களைக் கட்ட உங்களை அழைக்கின்றேன்


மார்ச்,18,2017. “பாலங்களை அல்ல, சுவர்களைக் கட்டவும், நன்மையால் தீமையையும், மன்னிப்பால் தவறுகளையும் வெற்றி காணவும், எல்லாருடனும் சமாதானத்துடன் வாழவும் உங்களை அழைக்கின்றேன்” என்ற செய்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், சிறார்க்கெதிரான வன்முறைகளை ஒழிப்பது குறித்த, ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்பு பிரதிநிதி Marta Santos Pais, இத்தாலியின் பெருஜியா பேராயர் கர்தினால் Gualtiero Bassetti, பானமா திருப்பீடத் தூதர் பேராயர் Andrés Carrascosa Coso, உகாண்டா திருப்பீடத் தூதர் பேராயர் Michael A. Blume ஆகியோரை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முந்திய நாளில், கர்தினால்கள் அவைக்கு அவர் ஆற்றிய உரையின் கையெழுத்துப் பிரதியை, கியூபா நாட்டு கத்தோலிக்க இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருத்தந்தை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், கர்தினால்கள் அவை கூடி, திருஅவையின் தேவைகள் குறித்து கலந்துரையாடினர். இந்த உரையாடலில், உரையாற்றிய, அர்ஜென்டீனாவின் புவனோஸ் அய்ரெஸ் பேராயரான கர்தினால் ஹோர்கெ பெர்கோலியோ அவர்கள், நற்செய்தி அறிவித்தலில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கர்தினால் பெர்கோலியோ அவர்கள், இஸ்பானிய மொழியில், கையில் எழுதிக்கொண்டுவந்து ஆற்றிய உரையின் கருத்துக்களால் கவரப்பட்ட, ஹவானா கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அவர்கள், இந்த எழுத்துப் பிரதியைக் கேட்டு வாங்கியதாக, ஊடகச் செய்தி கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காம் ஆண்டின் நிறைவையொட்டி, இந்த உரை, ஹவானா உயர் மறைமாவட்டத்தின் Palabra Nueva இதழில், வெளியிடப்பட்டது.   

கர்தினால் பெர்கோலியோ அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றார்.

ஆதாரம் : CWN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.