2017-03-15 13:33:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 8


மார்ச்,15,2017. இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்த்த பின்னர், பலமுறை தம் சீடர்களுக்கு காட்சியளித்து அவர்களோடு பேசினார், அவர்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தினார். அவர் விண்ணேற்றமடைவதற்கு முன் தம் சீடர்களிடம், உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்  என்று கூறினார். நற்செய்தியை பறைசாற்ற இயேசு தம் சீடர்களை அனுப்பிய இந்நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் (மத்.28:16-20;மாற்.16,15-18;லூக்.24:36-49;யோவா.20:19-23), திருத்தூதர் பணிகள் நூலிலும் (தி.ப.1:6-8) சொல்லப்பட்டுள்ளது. தங்கள் குருவின் இக்கட்டளையைச் செயல்படுத்திய சீடர்கள், எருசலேமில் தூய ஆவியாரைப் பெற்ற பின், உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றினர் என, இத்தொடர் நிகழ்ச்சியில் கேட்டு வருகிறோம்.

இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் இருவர், யாக்கோபு என்ற பெயரில் உள்ளனர். இவர்கள் பற்றிய குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக, தொடக்ககால கிறிஸ்தவத்தில், இவர்கள், "பெரிய யாக்கோபு", "சின்ன யாக்கோபு" என்று அழைக்கப்பட்டனர். பெரிய யாக்கோபு திருத்தூர் யோவானின் சகோதரர் மற்றும் இவர்கள் இருவரும் செபதேயுவின் மகன்கள். இவர்கள் பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா ஆகிய இருவரும் இதே ஊரைச் சேர்ந்தவர்கள்தான். திருத்தூதர் சின்ன யாக்கோபு, அல்பேயுவின் மகன். இவர், "சிறியவர்", "இளையவர்" என்று அழைக்கப்பட்டார். சின்ன யாக்கோபு பற்றி, மாற்கு நற்செய்தி பிரிவு 15, திருச்சொல் 40ல் இவ்வாறு வாசிக்கிறோம். இயேசு கல்வாரியில் சிலுவையில் தொங்கி உயிர்விடும்போது, பெண்கள் சிலரும் அச்சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள், மகதலா மரியாவும், சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். மரியா, யாக்கோபின் தாய் என, நற்செய்தியில் மேலும் இரு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. சின்ன யாக்கோபு, அல்பேயுவின் மகன் எனவும், பெரிய யாக்கோபு செபதேயுவின் மகன் எனவும் நற்செய்தியில் வாசிக்கிறோம். அல்பேயுவின் மகனான சின்ன யாக்கோபு, இயேசுவுக்கு உறவினர் என்று பாரம்பரியமாகக் கூறப்படுகிறது. திருத்தூதர் மத்தேயுவின் தந்தையின் பெயரும் அல்பேயு என்பதால், சின்ன யாக்கோபும், மத்தேயுவும் சகோதரர்கள் (மாற்.2:14,3:18) எனவும் ஒரு சாரார் சொல்கின்றனர். .

திருத்தூதர் சின்ன யாக்கோபுவின் நற்செய்திப் பணி எருசலேமிலே நடந்தது. இவர், எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைவராகப் பொறுப்பேற்று மக்களைத் துணிவுடன் நடத்தினார். இவருடைய கண் முன்னால் பல சீடர்களை யூதத் தலைவர்கள் கொலைசெய்தாலும்கூட, இறுதி வரை துணிச்சலோடு வாழ்ந்தார். இவரின் நற்செய்திப் பணி எருசலேமில் தொடர்ந்து நடந்தது. யூத மதத் தலைவர்களுக்கு இது பெருத்த களங்கமாக இருந்தது. இதனால், யாக்கோபுவை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்து, அதற்குச் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். அப்போதைய உரோமை ஆளுநர் Porcius Festusன் மரணத்தின் மூலமாக இந்த வாய்ப்பு வந்தது. ஆளுநன் Festus இறந்ததும், அடுத்த ஆளுநர் பதவியேற்கவிருந்த நாள்கள் அவை. ஆளுநராக யாரும் இல்லாத இந்த இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி, யாக்கோபுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர்.  அதனால் அவர்கள் யாக்கோபுவைக் கைது செய்தனர். யாக்கோபு பொய்யான இறைவாக்குச் சொல்கிறார், மதத்தை இழிவுபடுத்துகிறார் என்று குற்றம் சாட்டினர். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சாட்சிகள் யாக்கோபுக்கு எதிராக பொய் சாட்சி சொன்னார்கள். யாக்கோபுக்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டது. எருசலேம் ஆலயத்தின் மேல்மாடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு. திருத்தூதரின் ஆதரவாளர்கள் கீழே நின்று கண்ணீர் வடித்தனர். அவரும், அவரைச் சார்ந்த கிறிஸ்தவர்களும் இயேசுவை மறுதலிக்குமாறு, யூதத் தலைவர்கள் வற்புறுத்தினர். ஆனால் திருத்தூதர் யாக்கோபு அந்த இடத்தையும் தன் போதனைக்காகப் பயன்படுத்தி,  கூடியிருந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவித்தார்.

கோபம் கொண்ட யூதத் தலைமைச் சங்கத்தினர், அவரை மேலிருந்து கீழே தள்ளினார்கள். கீழே விழுந்த யாக்கோபு மீது யூதர்கள் கற்களை எறிந்தனர். ‘தந்தையே இவர்களை மன்னியும்’என்று கூறி இயேசு கற்றுக் கொடுத்த மன்னிப்பை வாழ்க்கையின் வலிமிகுந்த தருணத்திலும் வழங்கினார் யாக்கோபு. அதைக் கண்ட ஒரு யூதர், வெறியுடன் துணி துவைக்கப் பயன்படுத்தும் ஒரு பெரிய உருளைக் கட்டையால் யாக்கோபின் தலையில் அடித்தான். திருத்தூதர் யாக்கோபு, மண்டை உடைய, உயிரை விட்டார். இயேசு மொழிந்த வாக்குப்படி, அவர் தம் திருத்தூதர்களுடன் உடனிருந்து செயல்பட்டார். அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். இன்றும் இயேசுவுக்காக, நற்செய்திக்காகப் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு மாறாக, கிறிஸ்தவமோ தழைத்து வளர்ந்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.