2017-03-14 15:20:00

தூய பேதுரு பசிலிக்காவில் முதன்முறையாக ஆங்கிலிக்கன் வழிபாடு


மார்ச்,14,2017. வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், முதன்முறையாக, ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை திருவழிபாடு, இத்திங்கள் மாலையில் நடைபெற்றது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு வரலாற்றில் மைல்கல்லை அமைத்துள்ள இந்நிகழ்வில், புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு மெர்ட்டன் கல்லூரி பாடகர் குழு, சீர்திருத்தக் காலத்தில் எழுதப்பட்ட பாடலையும், தற்போதைய பிரபலமான ஆங்கிலிக்கன் சபை பாடல்களையும் பாடியது.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய தலைமைக்குரு கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி அவர்கள், உரோம் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை மைய இயக்குனர் பேராயர் David Moxon அவர்களைச் சந்தித்தபோது, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு அனுமதியளித்தார்.

தூய பேதுரு பசிலிக்காவில், இத்திங்கள் மாலையில் நடைபெற்ற இவ்வழிபாடு, கத்தோலிக்க மற்றும், ஆங்கிலிக்கன் சபைகளுக்கு இடையே உறவுகளை ஆழப்படுத்துவதற்கு முக்கியமான, மற்றுமொரு முயற்சி என்றும், உரோம் அனைத்துப் புனிதர்கள் ஆங்கிலிக்கன் சபை ஆலயத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்ற இரு வாரங்களுக்குள், இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், தூய பேதுரு திருவுருவம் அமைந்திருக்கும் இடத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கத்தோலிக்க மற்றும், ஆங்கிலிக்கன் ஆயர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.