2017-03-14 15:08:00

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


மார்ச்,14,2017. “நலிந்தவர்கள் மற்றும், ஏழைகளுக்கு நம் கதவுகளைத் திறந்துவிடும் மனநிலையைப் பெறும்பொருட்டு, ஒருவர் ஒருவருக்காக நாம் செபிப்போம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தீ விபத்தில், இறந்தவர்கள் மற்றும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை, இளையோர் வன்முறைக்குப் பலியாகும் கொடிய நிகழ்வுகள், களையப்பட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.

குவாத்தமாலா நகருக்கு அருகில், San Jose Pinuelo எனும் இடத்தில் அமைந்துள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இம்மாதம் 8ம் தேதி இடம்பெற்ற கலவரத்தில், தீ பரவியதால் 21 சிறுமிகள் உயிரிழந்ததுடன், 40 பேர் வரையில் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். அக்கலவரத்தின்போது, அங்கிருந்து தப்புவதற்காக, இளைஞர்கள் சிலர், காப்பகப் பஞ்சு மெத்தைகளில் தீயைப் பற்ற வைத்ததில் இவ்விபத்து ஏற்பட்டது என சந்தேகிக்கப்படுகின்றது.

400 குழந்தைகளை மாத்திரமே தங்க வைக்கும் வசதியுள்ள காப்பகத்தில், கடந்த ஆண்டு 700 குழந்தைகள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும், அவரின் துணைவியார் கமில்லா ஆகிய இருவரும், இம்மாதம் 31ம் தேதி முதல், ஏப்ரல் 5ம் தேதி வரை, இத்தாலி மற்றும், வத்திக்கானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என, பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

இளவரசர் சார்லஸ் அவர்கள் தலைமையில், பிரித்தானிய பிரதிநிதி குழு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் அடக்கச் சடங்கில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.