2017-03-13 14:43:00

வாரம் ஓர் அலசல் – மரம் வைத்தவர் தண்ணீர் வார்க்காமலா?


மார்ச்,13,2017. தாரிப்பள்ளி ராமையா. இவரது சொந்த ஊர், தெலுங்கானா மாநிலம், தாரிப்பள்ளியாகும். ஆனால், இவரை அப்பகுதி மக்கள், சேட்லா ராமையா என்று அழைக்கின்றனர். சேட்டு என்றால் மரம் என்று அர்த்தம். மரத்திற்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால், இந்தச் செல்லப்பெயரால் இவர் அழைக்கப்படுகிறார்.   எழுபது வயதான இவர், மிதி வண்டியில் சென்று, வெட்டவெளியாகக் காணப்படும் இடங்களில் மரக்கன்றுகளை ஊன்றுகிறார். அத்துடன் தனது பணி முடிந்துவிட்டதாகக் கருதாமல், அவற்றைத். தண்ணீர் ஊற்றி பராமரித்தும் வருகிறார். தண்ணீர் அருகில் இல்லையென்றால், எத்தனை கிலோ மீட்டர் சென்றாவது தண்ணீரைக் குடத்தில் பிடித்து வந்து ஊற்றி, அந்த மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார். இவ்வாறு இதுவரை அவர் ஊன்றி பராமரித்து வரும் மரங்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டி விட்டது. இயற்கையைப் பாதுகாப்போம். நம் தலைமுறைகளுக்காக இறைவன் உருவாக்கிய அனைத்தையும் பாதுகாப்போம் என்பதுதான் சேட்லா ராமையா அவர்களின் தாரக மந்திரம். மரம் வைத்தவர் தண்ணீர் வார்க்காமலா இருப்பார்?

நம் தலைமுறைகளுக்காக, இயற்கையைப் பாதுகாப்போம், என்ற உயரிய நோக்கத்துடன் செயல்படும் தன்னார்வலர்களை உலகெங்கும் காண முடிகின்றது. படைப்புயிர்களே, படைப்புகள் மீது இவ்வளவு அக்கறை காட்டும்போது, படைத்தவர் தம் படைப்புயிர்கள் மீது, அதிலும், தம் உருவில் படைத்த மனிதர் மீது எவ்வளவு அக்கறை காட்டுவார்! இத்திங்களன்று நடந்த ஒரு நிகழ்வை, இ -தினத்தாள்களில் வாசிக்கையில், மரம் வைத்தவர் தண்ணீர் ஊற்றாமலா இருப்பார் என்ற எம் நம்பிக்கை வலுவடைந்தது.

கர்நாடக மாநிலம், மான்வி பகுதியைச் சேர்ந்த, முப்பது வயது நிரம்பிய எல்லம்மாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அவர் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். எல்லம்மாவுக்கு இரத்த சோகை இருப்பதால், அவர், தன் கணவர் ராமண்ணாவுடன் ராய்ச்சூரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்றுவிட்டு, பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். பேருந்தைவிட்டு இறங்கியதும், அந்த பரபரப்பான சாலையில், எல்லம்மாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவருக்கு இரத்தப்போக்கும் ஏற்படவே, வலி தாங்க முடியாமல் சாலையில் விழுந்து அலறித் துடித்துள்ளார். இந்நிலையில் திடீரென அங்கு வந்த, அறுபது வயது மதிக்கத்தக்க, பிச்சை எடுக்கும் பெண்மணி ஒருவர், எல்லம்மாவுக்கு பிரசவம் பார்க்கத் துவங்கியுள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு, வேறு சில பெண்களும் அங்கு வர, எல்லம்மாவுக்கு சுகப் பிரசவம் நடந்து அவர்கள் நினைத்தபடி பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதற்குப்பின், அப்பெண் மீண்டும் பிச்சை எடுக்கச் சென்றுவிட்டார். அப்பெண்ணுக்கு நன்றி கூறுவதற்காக, குழந்தையின் தந்தை ராமண்ணா அவரைத் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லையாம்.

கடவுள், தேவையில் இருக்கும் தம் பிள்ளைகளுக்கு, மனித உருவில் வந்து, எவ்வாறு உதவுகிறார் என்பதை, இளவரசி என்பவரின் பகிர்விலிருந்தும் அறிய வருகிறோம்.  ஓராண்டுக்கு முன், பிழைப்பு தேடி, சென்னை வளசரவாக்கத்தில் தஞ்சம் புகுந்தவர்  இளவரசி. வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் இவர் பற்றி, தினமலரில் கடந்த வாரத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இளவரசிக்கு இரு மகன்கள். மூத்தவர் திருமணமாகாதவர். இளையவர் திருமணமாகி, இரண்டரை மாத குழந்தை இருக்கும் நிலையில் இறந்து போனார். இவ்விரு மகன்களும் அடுத்தடுத்த விபத்துக்களில் இறந்தனர். இளைய மகனின் காரியத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால், மருமகளும் வீட்டைவிட்டுப் போய் விட்டார். எனவே, மிஞ்சியிருந்தவர் குடும்பத்தின் ஒரே வாரிசான, தொட்டிலில் கிடந்த பேரன் கோபிநாத். பேரனுக்கும் உடல்நலம் சரியில்லை. மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். பேரனைப் பரிசோதித்த மருத்துவர்கள்...

உன் பேரனுக்கு தலாசேமியா (Thalassemia) நோய். இது மரபணு சார்ந்த பிரச்சனையால் வரக்கூடியது, இந்த நோய் வந்தவர்களுக்கு இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாது, இதனால், மாதத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ புது இரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டும், இரும்புச்சத்து அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்தான சாப்பாடு தர வேண்டும், கால் கை வீங்காமல், காய்ச்சல் தலைவலி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். stem cell எனப்படும் குருத்தணு தானமாகக் கிடைத்தால், இந்த நோயில் இருந்து குழந்தையைக் காப்பாற்றலாம். குருத்தணு பாதிக்கப்பட்ட குழந்தையின் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் பெற்றோரிடம் இருந்து தானமாகப் பெறலாம். ஆனால் உங்கள் பேரன் கோபிநாத்திற்கு அப்படி யாருமே இல்லை. இவனது இரத்தத்தோடு ஒத்துப்போகக் கூடிய குருத்தணுவைத் தானமாகப் பெறும்வரை பேரனைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர். சிறுவன் கோபிநாத் படித்துவரும் வளசரவாக்கம், குட்ஷெப்பர்டு பள்ளியின் முதல்வர் முதல், உடன் படிக்கும் பிள்ளைகள் வரைக்கும் கோபிநாத்தின் பிரச்சனையைப் புரிந்துகொண்டு, அவன் மீது அளவற்ற பற்றும் பாசமும் காட்டினர். இந்த நிலையில், மருத்துவர் ரேவதி ராஜ் அவர்கள், இளவரசியின் நிலைமையைத் தெரிந்து கொண்டு எங்கெல்லாம் இலவசமாக இரத்தமும், மருந்தும், சிகிச்சையும் கிடைக்குமோ அங்கெல்லாம் எழுதிக் கொடுத்து சிபாரிசு செய்து சிறுவன் கோபிநாத்திற்கு உதவினார். மேலும், இந்த மருத்துவரின் தீவிர முயற்சியின் காரணமாக, ஜெர்மனியில் வாழும் ஒரு கொடையாளரின் குருத்தணு கோபிநாத்திற்குப் பொருந்திப் போனது. இந்தக் குருத்தணுவை கொண்டுவந்து (bone marrow transplant) சிகிச்சை செய்ய இருபத்தைந்து இலட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலை. எனவே இளவரசி, பேரனைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனத்துணிவோடு, தெருத்தெருவாக, வீடுவீடாக பணம் கேட்டு இரவு பகலாக அலைந்தார். கோபிநாத் வகுப்பில் படிக்கும் இரண்டாம் வகுப்பு சிறுவர்கள் தங்களது தீபாவளி, பிறந்தநாள் கொண்டாட்ட உடை மற்றும் பட்டாசு செலவுகளைத் தியாகம் செய்து, அந்த பணத்தை கோபிநாத்தின் சிகிச்சைக்காக கொடுத்தனர். இச்சிறாரிடம் ஆரம்பித்த இந்த நன்கொடை பழக்கம், அவர்களது பெற்றோர்கள் நண்பர்கள் என்று பரவி, ஒரு கட்டத்தில், மருத்துவமனை நிர்வாகமே நம்பமுடியாத நிலையில் சிகிச்சைக்குத் தேவையான பணம் திரண்டது. ஒரு நல்ல நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாதம் 2ம் தேதி மருத்துவச் சான்றிதழ் பெற்ற கையோடு வீட்டிற்கு வந்து விட்டார் கோபிநாத். பேரனைக் காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியில் இருக்கின்ற பாட்டி இளவரசி, தன்னைப் பேட்டி கண்ட செய்தியாளரிடம், இன்னும் சிலநாள் பேரனுக்கு விலையுயர்ந்த மருந்து மாத்திரைகள் கொடுக்கவேண்டும், சத்தான உணவும், பானங்களும் கொடுக்க வேண்டும், மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இன்னமும் கொஞ்சம் பணம் தேவைதான். ஆனால் மக்கள் நிறைய உதவி விட்டார்கள். ஆகவே நானாகப் போய் யாரிடமும் கேட்பது இல்லை. ஆனால் கடவுள் யார் வழியாகவாவது என் பேரன் கோபிநாத்திற்கு வேண்டியதைக் கொடுத்து விடுகிறார். இதோ இன்றைக்கு என் பேரனை பார்க்க வந்த நீங்கள், இவ்வளவு வாங்கிக்கொண்டு வந்து உதவவில்லையா? இதேபோல நாளைக்கு யார் மூலமாகவாவது ஏதாவது கிடைக்கும். இவ்வாறு, பாட்டி இளவரசி சொல்லியிருக்கிறார். இதேபோல்தான், அலமேலு என்பவரின் வாழ்விலும், சென்னை கள்ளிக்குப்பம் பகுதியில் இயங்கிவரும், ஆனந்தம் முதியோர் இல்லம் என்ற தண்ணீரை வார்த்திருக்கிறார் கடவுள்.

குடும்ப வறுமையினால், வயதிற்கு வந்த உடனேயே எழுபது வயதானவருக்கு இரண்டாம்தாரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டவர் அலமேலு. ஆனால், அவர், திருமணமான ஓர் ஆண்டிலேயே கணவரை இழந்தார். எழுபது வயதில் இறந்து போன கணவரைக் குறைசொல்லாத சமுதாயம், கணவனை முழுங்கியவள் என்றே, இளம்பெண் அலமேலுவின் மீது வார்த்தை நெருப்பை வாரிக்கொட்டியது. மறுமணம் என்பதற்கே இடமில்லாததால், உறவுகளின் வீடுகளில், சம்பளம் வாங்காத வேலைக்காரியாக மிஞ்சிய வாழ்நாளைக் கழிக்க, உழைத்துத் தேய்ந்தார். எழுபது வயதைத் தாண்டிய நிலையில், கண்புரை நோய் தாக்கியது. பார்வையற்ற பாட்டியைச் சுமையாக நினைத்தவர்கள், வீதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். எதிரில் நிற்பது மரமா? மனிதரா? காசு கேட்பதா? சாப்பாடு கேட்பதா? என திக்கற்ற நிலையில் இருந்த பாட்டி அலமேலுவை நல்ல மனிதர் ஒருவர், முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். அங்கு கண்புரை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நலமாக வாழ்ந்து வருகிறார் பாட்டி அலமேலு.

ஆதரவற்ற எத்தனையோ மக்களுக்கு, மனித நேயம் கொண்ட பலர் வடிவில், இறைவன் ஆதரவளித்து வருவதைப் பார்த்தும் கேட்டும் வருகிறோம். பேரிடர் காலங்களில் மனிதர்களை இழப்பது ஒருபுறமிருந்தாலும், அச்சமயங்களில், மனிதம் பெருக்கெடுப்பதையே காண்கிறோம். நம்மை நட்ட இறைவன், அறியாத தெரியாத பலர் வழியாக, தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகிறார். நம்மைப் பெற்றவர்கள், நாம் பெற்றவர்கள் கைவிட்டாலும், நம்மை இவ்வுலகுக்குக் கொணர்ந்த இறைவன் கைவிடமாட்டார். இந்த அனுபவம், நம் சொந்த வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம். எனவே, இறைவன் எனக்கு என்ன செய்தார் என்று குறை சொல்லிக்கொண்டிருக்காமல், அவர் நம் வாழ்வில் ஆற்றியிருக்கும் நன்மைகளை எண்ணிப் பார்ப்போம். எனக்குப் பெரிய பிரச்சனை உள்ளது என்று கடவுளிடம் சொல்லாதே, ஆனால், எனக்கு ஒரு பெரிய கடவுள் இருக்கிறார் என்று பிரச்சனையிடம் சொல் என்ற கூற்றை எண்ணிப் பார்ப்போம். மரம் நட்டவர் தண்ணீர் ஊற்றாமலா இருப்பார்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.