2017-03-13 16:16:00

சிலுவை என்பது அலங்காரப் பொருள் அல்ல, அன்பின் அழைப்பு


மார்ச்,13,2017. 'சிலுவை என்பது, வீட்டில் வைக்கும் அலங்காரப் பொருளோ, கழுத்தில் அணியும் ஆபரணமோ அல்ல, மாறாக, தீமையிலிருந்தும் பாவங்களிலிருந்தும் மனிதனை மீட்க, தன்னை தியாகம் செய்த இயேசுவின் அன்பு விடும் அழைப்பு' என இஞ்ஞாயிறன்று தன் மூவேளை செப உரையின்போது கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் உருமாற்றம் குறித்து விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தையொட்டி தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவோடு இறப்பவர், அவரோடு இணைந்து உயிர்த்தெழுவர், அவரோடு இணைந்து போராடுபவர், அவரோடு இணைந்தே வெற்றிவாகைச் சூடுவர் என உரைத்தார்.

உருமாற்றத்தின்போது இயேசுவின் முகம் கதிரவனைப்போல் ஒளிர்ந்ததும், அவர் ஆடைகள் ஒளி போன்று வெண்மையானதும் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, தன் சீடர்களின் மனதையும் இதயங்களையும் ஒளியூட்டும் நோக்கத்தையே இது உருவகப்படுத்துகின்றது, என்றார்.

தன் சீடர்களின் விசுவாசத்திற்கு சவாலாக இருக்கும் தன் சிலுவை மரணத்தைக் குறித்து, சீடர்களைத் தயாரிக்கவும், தன் உயிர்ப்பு குறித்து எடுத்துரைக்கவும் இந்த உருமாற்றத்தை இயேசு பயன்படுத்தினார்  எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வல்லமையுடைய ஓர் அரசராக மக்கள் எதிர்பார்த்த மெசியாவுக்கு மாற்றாக, தாழ்ச்சி நிறைந்த நிராயுதபாணியான ஒரு பணியாளராக தன்னை வெளிப்படுத்தும் இயேசு, இறுதியில் சிலுவையின் வழியாக மாட்சியடைவார் என்பதும், இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என, மேலும் கூறினார், திருத்தந்தை.

இத்தவக்காலத்தில், இயேசுவின் சிலுவையின் வல்லமை குறித்தும், தியாகத்தின் மதிப்பு குறித்தும் அதிகம் அதிகமாக தியானிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.