2017-03-13 15:58:00

இறைவாக்கினர் யோனாவின் கல்லறை தீவிரவாதிகளால் அழிப்பு


மார்ச்,13,2017. ஈராக்கின் மொசூல் நகரிலுள்ள அசீரிய அரண்மனையின் அடித்தளத்தில் அமைந்திருந்த இறைவாக்கினர் யோனாவின் கல்லறையை, முந்தைய இஸ்லாமிய ஆக்ரமிப்பாளர்கள் அழிவுக்குள்ளாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

2014ம் ஆண்டு இஸ்லாமிய தீவிரவாதிகளால் மொசூல் நகரம் கைப்பற்றப்பட்ட சில நாட்களிலேயே, இறைவாக்கினர் யோனாவின் கல்லறையை அவர்கள் சேதமாக்கியுள்ளதாக, அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

யூதர்களாலும், கிறிஸ்தவர்களாலும், இஸ்லாமியர்களாலும் மதித்துப் போற்றப்படும் இறைவாக்கினர் யோனாவின் கல்லறை சேதமாக்கப்பட்டுள்ளது, வரலாற்று இழப்பு என அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

2014ம் ஆண்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆக்ரமிக்கப்பட்ட ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல், அரசு துருப்புக்களால் கடந்த மாதம் மீண்டும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள், இந்த அழிவு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.

மொசூல் நகரின் வரலாற்று, மற்றும், கலை இழப்புக்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அகழ்வாராய்ச்சியாளர்களை ஈராக் அரசு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, இறைவாக்கினர் யோனாவின் கல்லறை சேதம் குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

ஆதாரம் :  AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.