2017-03-11 14:40:00

பாத்திமா அன்னை மரியாவின் செய்தி இக்காலத்திற்கும் ஏற்றது


மார்ச்,11,2017. போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் இடம்பெற்ற அன்னை மரியாவின் காட்சி உட்பட, சில காட்சிகளே திருஅவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும், நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பாத்திமாவில் அன்னை மரியா காட்சியில் கூறிய செய்தி, இக்காலத்திற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், போர்த்துக்கல் நாட்டு கர்தினால் José Saraiva Martins அவர்கள் கூறியுள்ளார்.

பாத்திமாவில், அன்னை மரியா காட்சி கொடுத்தபோது, விசுவாசம், மனமாற்றம், அமைதி மற்றும், நம்பிக்கை வாழ்வுக்கு அழைப்பு விடுத்தார், இக்காலத்தில் மக்கள் இவற்றை மறந்து வாழ்கின்றனர் எனவும், தெரிவித்தார், கர்தினால் Saraiva.

வருகிற மே மாதத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, கத்தோலிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார், கர்தினால் Saraiva.

இவ்வுலகில் அமைதியாகவும், மனிதர்களாகவும், உடன் பிறப்பு உணர்வு கொண்டவர்களாகவும் வாழ விரும்பினால், பாத்திமாவில், அன்னை மரியா உலகுக்கு வழங்கிய செய்தியை நாம் மறக்கக் கூடாது என, திருத்தந்தை நினைவுபடுத்துவார் எனவும் கூறினார், கர்தினால் Saraiva.

1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல், அதே ஆண்டு அக்டோபர் 13ம் தேதி வரை, 10 வயது நிரம்பிய லூசியா சாந்தோஸ், 9 வயது நிரம்பிய ஜெசிந்தா மார்த்தோ, 7 வயது நிரம்பிய பிரான்சிஸ் மார்த்தோ ஆகிய மூன்று சிறாருக்கு, பாத்திமாவில் அன்னை மரியா காட்சியளித்தார்

இவ்வாண்டு மே 12,13 தேதிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Rome Reports / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.