2017-03-11 14:49:00

தவக்காலச் சிந்தனை... குறுக்கு வழியில் மாற்றங்கள் வேண்டாம்


தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும், மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் என்ற எண்ணங்களை அசைபோட இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. உருக்குலைந்த இயேசுவை, சென்ற ஞாயிறு சந்தித்த நாம், உருமாறிய இயேசுவை, இந்த ஞாயிறு சந்திக்கிறோம். பாலை நிலத்தில், நாற்பது நாள் கடுந்தவம் மேற்கொண்ட இயேசு, உருகுலைந்திருந்த நேரத்தில், அவர், எவ்விதம் தன்னையே எளிதாக, விரைவாக, உருமாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுக்கு வழிகளை, சாத்தான் சொல்லித்தந்தது.

அந்த குறுக்கு வழிகளை ஏற்றுக்கொள்ளாத இயேசு, பாடுகள், மரணம் என்ற வேதனை நிறைந்த வழியில் தான் மாற்றம் பெறப்போவதாக தன் சீடர்களுக்கு சொல்கிறார். இந்தக் கூற்றினால், அதிர்ச்சியடைந்து, மனம்தளர்ந்து போயிருந்த சீடர்களில் மூவருக்கு, உறுதி வழங்கும் வகையில் நிகழும் இயேசுவின் உருமாற்றம், இடம்பெற்றுள்ளது.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள வேளையில், தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகமும் (தொடக்கநூல் 12 : 1-4) மாற்றத்தைப் பற்றி கூறுகிறது. மாற்றங்களை சந்திக்க, இளவயது பொருத்தமானது; வயது முதிர்ந்த காலத்தில், மாற்றங்கள் வரும்போது, அவற்றை ஏற்பதற்கு, பெரும் தயக்கம் நமக்குள் உருவாகும். தான் பிறந்துவளர்ந்த ஊரைவிட்டு, வேறோர் ஊருக்குச்செல்ல, ஆபிரகாம் அழைக்கப்பட்டபோது, அவருக்கு வயது 75. (தொ.நூ. 12:4)

இளமையிலும், முதுமையிலும் மாற்றங்கள் வரும்போது, குறுக்கு வழிகள் வேண்டாம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.