2017-03-11 15:07:00

1945க்குப் பின்னர், உலகில் கடும் மனிதாபிமான நெருக்கடி


மார்ச்,11,2017. 1945ம் ஆண்டுக்குப் பின்னர், இவ்வுலகம் கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்குகின்றது என்று சொல்லி, இந்தப் பெரும் துன்பத்தை அகற்றுவதற்கு, உலகினரின் உதவிக்கு விண்ணப்பித்துள்ளது, ஐ.நா. நிறுவனம்.

ஏமன், சொமாலியா, தென் சூடான், நைஜீரியா ஆகிய நாடுகளில், இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள், பசிக்கொடுமையையும், பஞ்சத்தையும் எதிர்கொள்கின்றனர் என்று, ஐ.நா.வின் அவசரகால நிவாரண உதவி ஒருங்கிணைப்பாளர் Stephen O'Brien அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவையில், இவ்வெள்ளியன்று தெரிவித்தார்.

இவ்வாண்டில், 14 இலட்சம் சிறார், பசிச்சாவை எதிர்கொள்ள நேரிடும் என, யூனிசெப் நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது என்றும், இந்த மனிதாபிமானப் பேரிடரைத் தடுப்பதற்கு, வருகிற ஜூலை மாதத்திற்குள் 440 கோடி டாலர் நிதியுதவி தேவைப்படுகின்றது என்றும் கூறினார், O'Brien.  

ஏமனில், அரசுக்கும் Houthi கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையில், அந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, அதாவது, ஏறக்குறைய ஒரு கோடியே 90 இலட்சம் மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று கூறினார், O'Brien.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.