2017-03-10 14:55:00

திருஅவையின் கலாச்சார வளங்கள், அருங்காட்சியகப் பொருள்கள் அல்ல


மார்ச்,10,2017. திருஅவையின் கலாச்சாரப் பாரம்பரியச் சொத்துக்கள், அருங்காட்சியகப் பார்வைப் பொருள்கள் அல்ல, மாறாக, அவற்றின் மேன்மை உணரப்பட்டு, மதிக்கப்பட வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், தேசியக் கூட்டமொன்றில் கூறினார்.

யுனெஸ்கோவில் திருப்பீட பிரதிநிதியாகப் பணியாற்றும் பேரருள்திரு Francesco Follo அவர்கள், இத்தாலியின் வெனிஸ் நகரில், சமய கலாச்சார பாரம்பரியச் சொத்துக்கள் பற்றி அறிதல், பாதுகாத்தல், மதித்தல் என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

திருஅவையின் கலாச்சாரப் பாரம்பரியச் சொத்துக்கள் வெளிப்படுத்தும், சமய மற்றும் மேய்ப்புப்பணி விழுமியங்களை மறந்து, பொருளாதார மற்றும், சமூகக் கூறுகளை மட்டும் புரிந்துகொள்வதற்கு முயற்சித்தால், அவற்றின் முக்கியத்துவம் இழக்கப்படும் என்றும் எச்சரித்தார், பேரருள்திரு Follo.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம், சிஸ்டீன் சிற்றாலயம் போன்ற, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சமய கலாச்சார பாரம்பரியச் சொத்துக்கள், வத்திக்கான் நகர நாட்டிற்குள்ளேயே இருக்கின்றன என்று உரையாற்றிய, பேரருள்திரு Follo அவர்கள், விசுவாசத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இடையே உறுதியான தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

உலகிலுள்ள கலாச்சாரப் பாரம்பரியச் சொத்துக்களில் ஐம்பது விழுக்காடு இத்தாலியில் உள்ளன எனவும், இவற்றில், எழுபது முதல் எண்பது விழுக்காடு, திருஅவையைச் சார்ந்தவை எனவும், உரைத்த பேரருள்திரு Follo அவர்கள், இத்தாலியில், ஏறக்குறைய 95 ஆயிரம் ஆலயங்கள், மூவாயிரம் நூலகங்கள் மற்றும், 28 ஆயிரம் பங்குத்தள கலாச்சார வளங்கள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.