2017-03-09 15:33:00

பெண்கள் உலக நாளையொட்டி, ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி


மார்ச்,09,2017. பாரம்பரியம், கலாச்சாரம், மதம், என்ற பல தளங்கள் வழியே, உலகெங்கும் பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தவும், முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மார்ச் 8, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட பெண்கள் உலக நாளையொட்டி, செய்தி வெளியிட்ட  கூட்டேரஸ் அவர்கள், பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதால், சமுதாய முன்னேற்றம் பெரிதும் பின்னோக்கிச் சென்றுள்ளது என்று கூறினார்.

ஆண்-பெண் பாலின பாகுபாடுகளைக் களைந்து, சமத்துவம் நிலவினால், 2025ம் ஆண்டிற்குள், இவ்வுலகம், 12,000 கோடி டாலர்கள் என்ற அளவில், தன் ஆண்டு வருமானத்தை உயர்த்தமுடியும் என்று,  கூட்டேரஸ் அவர்கள், சுட்டிக்காட்டினார்.

கல்வி வழங்கப்படுவதாலும், பணியிடங்களில் தகுந்த மரியாதை வழங்கப்படுவதாலும் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கு மனித சமுதாயம் ஒருங்கிணைந்து முயலவேண்டும் என்று, பெண்கள் உலக நாளையொட்டி, ஐ.நா. அவை அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.