2017-03-08 14:33:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 7


மார்ச்,08,2017. திருத்தூதர் அந்திரேயா, இயேசுவைப் பின்பிற்றிய முதல் சீடர் என்னும் பெருமைக்கு உரியவர். "Protocletus" (the First Called), அதாவது, 'முதல் அழைப்புப் பெற்றவர்' என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் முதலில், திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். பின்னர் ஒருநாள், திருமுழுக்கு யோவான், 'இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி' (யோவா.1,36) என்று, இயேசுவைச் சுட்டிக்காட்டியதும், இயேசுவே மெசியா என்று கண்டுகொண்டு,  இயேசுவைப் பின்தொடர்ந்தவர் அந்திரேயா. தான் கண்ட மெசியாவை, தன் சகோதரர் பேதுருவுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அதற்குப் பின்னர், இவ்விரு சகோதரர்களும், இயேசுவின் சீடரானார்கள். கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா ஊரைச் சேர்ந்த இவர், திருமணமாகாதவர். தன் சகோதரர் பேதுருவுடன் சேர்ந்து மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தார். கிரேக்கத்தில், 'அந்திரேயா' என்றால், துணிச்சலான, ஆண்மை மிக்க, வலிமையுடைய என்று பொருள். ஒருசமயம், தம்மிடம் பெருந்திரளாய் மக்கள் பின்தொடர்ந்து வருவதைக் கண்ட இயேசு, இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம் என்று, திருத்தூதர் பிலிப்புவிடம் கேட்டார். அப்போது, ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வைத்திருந்த ஒரு சிறுவனை இயேசுவிடம் சுட்டிக்காட்டியவர் (யோவா.6,8) திருத்தூதர் அந்திரேயா. மற்றொரு சமயம், சில கிரேக்கர்கள், திருத்தூதர் பிலிப்புவிடம் சென்று, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கேட்டபோது, பிலிப்பு, அந்திரேயாவிடம்தான் அது பற்றிச் சொன்னார். பின்னர், அந்திரேயாவும், பிலிப்புவும் இயேசுவிடம் சென்று அதை அறிவித்தனர் (யோவா.12,20-22). இவ்வாறு, சில முக்கியமான தருணங்களில் இயேசுவோடு, மிக நெருக்கமாக இருந்த திருத்தூதர்களில் ஒருவராக, நற்செய்தி நூல்களில் அந்திரேயா சுட்டிக்காட்டப்படுகிறார்.

அக்காலத்தில், எருசலேமில் பெந்தக்கோஸ்து திருவிழா நாளின்போது திருத்தூதர்கள் தூய ஆவியாரைப் பெற்ற பின்னர், உலகின் பல இடங்களுக்கும் நற்செய்தி அறிவிக்கச் சென்றனர். அதன்படி, அந்திரேயா Scythiaவுக்குச் சென்றார் என, யுசேபியுஸ் அவர்கள் எழுதிய, திருஅவை வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. Scythia என்பது, அக்காலத்தில், வட கிழக்கு ஐரோப்பாவையும், கருங்கடலின் வடக்குக் கடற்கரைப் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பகுதியாகும். இந்நிலப் பகுதிக்கு, பழங்கால கிரேக்கர்கள் அளித்த பெயரே இது. Scythia தவிர, Dnieper நதிப் படுகை, உக்ரைன் நாட்டின் கீவ், இரஷ்யாவின் மிக முக்கிய வரலாற்று நகரங்களில் ஒன்றான Novgorod வரை அந்திரேயா நற்செய்தி அறிவித்தார். ஐரோப்பாவின் பெரிய நதிகளில் ஒன்றும், நான்காவது நீளமான நதியுமான Dnieper, இரஷ்யா, பெலாருஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் வழியாகப் பாய்ந்து கருங்கடலில் கலக்கின்றது. உக்ரைன், இரஷ்யா, ருமேனியா ஆகிய பகுதிகளில் இவர் நற்செய்திப் பயணங்கள் மேற்கொண்டு, பலரை கிறிஸ்துவிடம் கொண்டு வந்தார். அதனால், திருத்தூதர் அந்திரேயா, உக்ரைன், இரஷ்யா, ருமேனியா ஆகிய நாடுகளின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார்.

திருத்தூதர் அந்திரேயா, தற்போதைய ஜார்ஜியா நாட்டிலுள்ள Caucasus மலையடிவாரத்தில் பணி செய்யச் சென்றார் எனவும், அவரைப் பற்றி பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள அப்பகுதியில், இயேசுவைப் பற்றிப் போதிப்பது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. இயேசு யார் என்பதையே அறிந்திராத இம்மக்கள் மத்தியில் சில காலம் பணியாற்றியபின், அங்கிருந்து, தற்போதைய துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்குச் சென்றார். இஸ்தான்புல், அக்காலத்தில், பைசான்டைன் எனும் பெயரிலும், பின்னர், கான்ஸ்டான்டிநோபிள் எனும் பெயரிலும் அழைக்கப்பட்டது. அங்கு, மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’என்று அந்திரேயா முழங்கினார்.. பைசான்டைன் அரசு, அந்திரேயாவைச் சிறையில் அடைத்து, எச்சரித்தது. அந்திரேயா துணிச்சலுடன் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்தார். இதனால், மக்கள் அவரை கல்லால் எறிந்தார்கள். ஆனாலும் அவர், சளைக்காமல், தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். திருத்தூதர் அந்திரேயா, இஸ்தான்புல் நகரிலிருந்து, மாசிடோனியா, பல்கேரியா, கிரீஸ் துருக்கி நாடுகளின் எல்லையிலுள்ள Thrace  என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகிய பகுதிகளிலும் நற்செய்தியை அறிவித்து, கொரிந்து வளைகுடா வழியாக பத்ரோஸ் சென்றார். அங்கு அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்தார். பலரைக் குணமாக்கினார். யாரைக் குணமாக்கினாலும், இயேசு உனக்குக் குணமளித்தார் என்று சொல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்ததால் இயேசுவின் பெயர் அங்கே பரவத் துவங்கியது. நோயுற்றிருந்த ஏஜியேட்ஸ் என்ற உரோமை ஆளுநரின் மனைவியை அந்திரேயா குணப்படுத்தினார். இதனால், அவரும் கிறிஸ்தவத்தைத் தழுவினார். இதனால், ஏஜியேட்ஸ் அந்திரேயாவை விரைவில் நாடு கடத்த வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் அவனுடைய சகோதரன் ஸ்ராட்டோக்லிசும் அந்திரேயாவுடன் சேர்ந்தார். அவரையே, அந்திரேயா அந்த நாட்டின் கிறிஸ்தவ மதத் தலைவராக நியமித்தார். ஏஜியேட்ஸ் இதனால் பெரிதும் எரிச்சலடைந்து, திருத்தூதர் அந்திரேயாவை அழைத்து, இந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றான். ஆனால், அந்திரேயா தொடர்ந்து பணி செய்தார்.

அந்திரேயா நிறைய இறைவாக்குகள் சொன்னார். சிறையில் மத்தியாஸ் அடைக்கப்பட்ட போது உருக்கமாகச் செபித்தார். அவருடைய செபத்தினால் சிறையில் அவரைக் கட்டியிருந்த சங்கிலிகள் உடைந்து தெறித்தன. ஆள்பவர்களின் கோபமும் மக்களின் கோபமும் அந்திரேயா மீது திரும்பியது. அவர்கள் அந்திரேயாவை அடித்து உதைத்தனர். அவருடைய பற்கள் உடைந்து தெறித்தன. அவர்கள் அவருடைய விரல்கள் சிலவற்றை வெட்டி எறிந்தனர். அவரைக் குற்றுயிராக்கி ஒரு மலைச்சரிவில் எறிந்தார்கள். மலைச்சரிவில் கிடந்த மனிதருக்கு இயேசு தோன்றி, அவருடைய காயங்களை ஒரே நாளில் ஆற்றினார். மறுநாள், மக்கள் முன்னிலையில் அதே பழைய ஆர்வத்துடன் மீண்டும் தோன்றினார் அந்திரேயா. மக்கள் அதிர்ந்தார்கள். இப்படி அடித்துப் போட்ட ஒரு மனிதனும் பிழைத்து வந்ததாக வரலாறு இல்லையே என்று நடுங்கினார்கள். அந்திரேயா அவர்களிடம் தன்னைக் குணமாக்கியதும் அதே இயேசு தான் என்று சொல்ல, மக்கள் பலர் அவரையும், இயேசுவையும் நம்பினார்கள். ஒரு முறை, இறந்த ஒருவர் உயிர்பெற்றெழச் செய்தார். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் செல்லவே, ஏஜியேட்ஸ், அந்திரேயாவுக்கு, எவ்வித விசாரணையுமின்றி மரண தண்டனையை, அதுவும் சிலுவை மரணத்தைத் தீர்ப்பிட்டார்.

திருத்தூதர் அந்திரேயா, கிரேக்க நாட்டிலுள்ள பத்ரோசில், X வடிவத்தில் அமைக்கப்பட்ட சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக உயிர் துறந்தார். அதுவும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட முறையில் தானும் அறையப்பட தகுதியற்றவன் என்று சொல்லி, இவ்வாறு தன்னை அறையுமாறு அந்திரேயா கேட்டுக்கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. X வடிவச் சிலுவை, புனித அந்திரேயாவின் சிலுவை என அழைக்கப்படுகின்றது. இரண்டு நாட்கள் சிலுவையில் தொங்கிய அந்திரேயா, விடாமல் மக்களுக்குப் போதித்துக் கொண்டே இருந்தார். மாபெரும் மக்கள் எழுச்சி, அரசுக்கு எதிராக எழும்புவதை அறிந்த மன்னன் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி விடவேண்டுமென்று விரும்பி சிலுவையை நெருங்கினான். ஆனால் அந்திரேயா ஒத்துக் கொள்ளவில்லை. தான் இயேசுவை தரிசித்து விட்டதாகவும், இனிமேல் இவ்வுலக வாழ்க்கை சாத்தியமில்லை என்றும் பிடிவாதமாய் சிலுவையில் தொங்கினார். அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்குங்கள் என மன்னன் வீரர்களுக்கு ஆணையிட்டான். வீரர்கள் அந்திரேயாவின் சிலுவையை நெருங்க அவர்களின் கைகள் மரத்துப் போயின. திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி வெள்ளம் பாய்ந்து வந்து அந்திரேயாவை நனைத்தது. அரை மணி நேரம் அந்த ஒளி அந்திரேயா மீது பாய்ந்து கொண்டே இருந்தது. அந்த ஒளி விலகியபோது அந்திரேயா இறந்து போயிருந்தார். அந்திரேயா இறந்தபோது காலம் கிபி 69, நவம்பர் முப்பதாம் நாள். ஏஜியேட்சின் மனைவி மேக்ஸ்மில்லாவும், அவரது சகோதரன் ஸ்ராட்டோகிலிசும் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தார்கள்.

தூய அந்திரேயாவின் திருப்பொருள்கள், பத்ராஸ் நகரிலுள்ள, புனித அந்திரேயா பேராலயத்திலும்,  இத்தாலியின் Amalfi நகரின் புனித அந்திரேயா பேராலயத்திலும், ஸ்காட்லாந்தின் எடின்பர்க் புனித மரியின் உரோமன் கத்தோலிக்கப் புனித அந்திரேயா பேராலயத்திலும், போலந்து நாட்டின் வார்சா நகரின் புனித அந்திரேயா மற்றும் புனித ஆல்பெர்ட் ஆலயத்திலும் என, உலகின் பல்வேறு பகுதிகளின் ஆலயங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. புனித அந்திரேயாவின் திருப்பொருள்கள் பற்றி, ஒரு பாரம்பரியக் கதை இவ்வாறு சொல்கிறது.

புனித அந்திரேயாவின் சில எலும்புகளை மறைத்து வைக்குமாறு, கிரேக்க நாட்டின் பத்ராசில் வாழ்ந்த புனித ரெகுலுஸ் என்ற துறவிக்கு கனவில் கூறப்பட்டது. இது நடந்த சில நாள்களுக்குள், அக்காலத்திய உரோமன் பேரரசர் கான்ஸ்டான்டைன் அவர்களின் ஆணையின்பேரில், ஏறக்குறைய கி.பி.357ம் ஆண்டில், பத்ராசிலிருந்து, கான்ஸ்டான்டிநோபிளுக்கு எடுத்துவரப்பட்டு, தூய திருத்தூதர்கள் ஆலயத்தில் வைக்கப்பட்டன. துறவி புனித ரெகுலுஸ் அவர்களுக்கு, மீண்டும் கனவில் ஒரு வானதூதர் தோன்றி, மறைத்து வைக்கப்பட்டிருந்த புனித அந்திரேயாவின் சில எலும்புகளை, உலகின் கடை எல்லைவரைக்கும் எடுத்துச் செல்லுமாறு பணித்தார். அதன்படி அவற்றை அத்துறவி, புனித அந்திரேயாவின் முழங்கால் மூட்டு எலும்பு, தோள்பட்டை எலும்பு, மூன்று விரல்கள், பற்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றார். அவர் முதலில், மேற்கு நோக்கி பயணம் மேற்கொண்டார். அவர் சென்ற கப்பல், எங்கெங்கு சேதமடைந்ததோ அந்தந்தக் கடற்கரைப் பகுதிகளில் இறங்கி, அவ்விடங்களில் புனித அந்திரேயாவின் திருப்பொருள்களை வைத்தார். அவ்விடங்களில் அப்புனிதரின் பெயரில் ஆலயங்களும் கட்டப்பட்டன. ஸ்காட்லாந்தின் Fife கடல்பகுதியில் முதலில் கப்பல் சேதம் அடைந்தது. அங்கு அத்துறவி விட்டுச்சென்ற இத்திருப்பொருளை, கி.பி.597ம் ஆண்டில், புனித அகுஸ்தீன் மறைப்பணியாற்றிய போது, பிரித்தானியாவுக்கு எடுத்துச்சென்றார் எனவும், 732ம் ஆண்டில், Hexham ஆயர் Acca அவர்களால், Fifeக்கு அப்பொருள்கள் மீண்டும் கொடுக்கப்பட்டன எனவும் கூறப்படுகின்றது.

1208ம் ஆண்டில், கான்ஸ்டான்டிநோபிள் நகரம், துருக்கியின் ஒட்டமான்களால் சூறையாடப்பட்டபோது, அந்நகரில் வைக்கப்பட்டிருந்த தூயவர்கள் அந்திரேயா மற்றும் பேதுருவின் திருப்பொருள்கள், இத்தாலியின் Amalfi நகரைச் சேர்ந்த கர்தினால் பீட்டர் காப்புவா அவர்களால், Amalfi நகருக்குக் எடுத்துவரப்பட்டது. அக்காலத்தில், உயிர் தப்பிய பைசான்டைன் பேரரசர் 2ம் மானுவேல் Palaiologos அவர்களின் இளைய மகனான தாமஸ் Palaiologos அவர்கள், மொரேயா பகுதியை ஆட்சி செய்து வந்தார். 1461ம் ஆண்டில், ஒட்டமான்கள் கொரிந்து கடல்பகுதியைக் கடந்த போது, Palaiologos, பத்ராசிலிருந்து இத்தாலியில் தஞ்சம் புகுந்தார். அப்போது தன்னுடன் எடுத்துவந்திருந்த புனித அந்திரேயாவின் மண்டை ஓட்டை, திருத்தந்தை 2ம் பத்திநாதர் அவர்களிடம் ஒப்படைத்தார். இதனை, திருத்தந்தையும், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் வைத்தார். ஆயினும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையினரோடு கொண்டுள்ள நல்லுறவின் அடையாளமாக, 1964ம் ஆண்டில்,  திருத்தந்தை 6ம் பவுல், வத்திக்கானிலிருந்த புனித அந்திரேயாவின் திருப்பொருள்கள் அனைத்தையும், பத்ராசுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். அதன்படி, கர்தினால் அகுஸ்தீன் பெயா தலைமையிலான குழு அவற்றை எடுத்துச் சென்றது.

அந்திரேயா, பைசான்டைன் திருஆட்சிப் பீடத்தையும் தோற்றுவித்தார் என மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. இந்த திருஆட்சிப் பீடமே, தற்போதைய கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையாகும். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தலைமைப்பீடத்தைக் கொண்டிருக்கும் இத்திருஅவையின் தலைவராக, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் உள்ளார். இத்திருஅவை, ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 30ம் தேதியன்று, திருத்தூதர் அந்திரேயாவின் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. அன்றைய தினத்தில், திருத்தந்தையின் பிரதிநிதி குழு ஒன்று, இஸ்தான்புல் சென்று, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும், அதேபோல், கான்ஸ்டான்டிநோபிள் திருஅவையின் பிரதிநிதி குழு ஒன்று, தூய பேதுரு விழாவன்று, வத்திக்கான் வந்து நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. மேலும், கி.பி. 356ம் ஆண்டில், திருத்தூதர் அந்திரேயாவின் திருப்பொருள்கள், கான்ஸ்டான்டிநோபிளுக்குக் கொண்டு வரப்பட்டு, தூய திருத்தூதர்கள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நகர் மக்களால், எந்த அளவுக்கு அன்புகூரப்படுகின்றார், இப்புனிதரின் பெயரில், இந்நகரில் எழுப்பப்பட்டுள்ள பல ஆலயங்களே சான்று.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.