2017-03-06 15:34:00

இலங்கையில் ஒப்புரவை உருவாக்கும் பணியில் மதத்தலைவர்கள்


மார்ச்,06,2017. பல ஆண்டுகள் இனமோதல்களால் பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டில், ஒப்புரவை உருவாக்கும் நோக்கில், அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் புத்த மதத்தலைவர்களுடன் இணைந்து அமைதிப்பணியைத் துவக்கியுள்ளார், ஆங்கிலிக்கன் போதகர் ஒருவர்.

நியூசிலாந்தில் பிறந்து தென் ஆப்ரிக்காவில் பணியாற்றியபோது, இனவெறி குழுக்களால் தாக்கப்பட்டு, தன் கைவிரல்களையும், ஒரு கண்ணையும் இழந்த ஆங்கிலிக்கன் போதகர் Michael Lapsley அவர்கள், கடந்த கால கசப்பான எண்ணங்களை, மன்னிப்பின் வழியாக மறந்து, அமைதியை உருவாக்கலாம் என்று கூறினார்.

'கடந்த கால கசப்புணர்வுகளை குணப்படுத்தல்' என்ற தலைப்பில் அமைப்பு ஒன்றை துவக்கி, தென் ஆப்ரிக்காவில் ஒப்புரவுக்குப் பணியாற்றிவரும் ஆங்கிலிக்கன் போதகர் Lapsley அவர்கள், போருக்குப்பின், அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், பகைமையையும் கசப்புணர்வுகளையும் ஒழிப்பது என்றார்.

பல்வேறு இனங்கள் வாழும் ஒரு சமுதாயத்தில், ஓரினம் ஏனைய இனத்திற்கு ஆற்றிய தீமைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை அகற்ற முயல்வதே, அமைதிக்குரிய முதல்படி எனவும் கூறினார் அவர்.

ஆதாரம் : UCAN  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.