2017-03-02 15:33:00

வரலாற்றில் வீசும் நச்சுக் காற்றால் மூச்சடைத்துப் போகிறோம்


மார்ச்,02,2017. "உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" என்று, இறைவாக்கினர் யோவேல் வழியாக, இறைவன் விடுக்கும் அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநீற்றுப் புதன் மாலையில் கொண்டாடிய திருப்பலியில், தன் மறையுரையின் மையப் பொருளாக்கினார்.

இப்புதன் மாலை, உரோம் நகரில் அமைந்துள்ள புனித சபீனா பசிலிக்காவில் தவக்காலத்தின் முதல்நாள் திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை, இறைவனின் கருணையைக் காண்பதற்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த காலம், தவக்காலம் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதர்கள், மீண்டும் மண்ணாகப் போவது இயற்கை என்றாலும், இந்த மண்ணின் மீது, இறைவனின் கருணை மிகுந்த மூச்சுக் காற்று பட்டதால் நாம் வாழ்வு பெற்றோம் என்பது, நமக்கு வழங்கப்பட்ட மிகப் பெரும் கொடை என்று திருத்தந்தை கூறினார்.

மனித வரலாற்றில் வீசும் நச்சுக் காற்றால் நாம் மூச்சடைக்கப்பட்டாலும், இறைவனின் வாழ்வு வழங்கும் மூச்சு, தொடர்ந்து நம்மீது பட்டுக்கொண்டே இருக்கிறது என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.

வாழ்வை ஒரு பொருட்டாக மதிக்க மறுப்பது, அக்கறையற்ற நிலை, போன்ற நச்சுக் காற்றுகள் வீசுவதால், நமது உலகச் சூழல் அதிக மாசடைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய மாசடைந்த சூழலுக்கு மறுப்புத் தெரிவிக்க, தவக்காலம் நம்மை அழைக்கிறது என்று கூறினார்.

நம்மை மட்டுமே மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் செபம், நோன்பு, தர்மம் என்ற செயல்பாடுகளிலும், நாம் மூச்சடைத்துப் போக வாய்ப்புக்கள் உண்டு என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, காயப்பட்டிருக்கும் நம் உடன்பிறந்தோரை மையப்படுத்தி, நம் தவக்கால முயற்சிகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

யாரையும், எந்த அடிப்படையிலும் ஒதுக்கி வைக்காமல், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்பதை திருத்தந்தை, திருநீற்றுப் புதன் மறையுரையில் வலியுறுத்தினார்.

இப்புதன் மாலை 4.30 மணிக்கு, புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து புறப்பட்ட தவப் பயணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், திருப்பீட அதிகாரிகள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கலந்துகொண்டனர்.

தவப்பயணத்தின் இறுதியில், புனித சபீனா பசிலிக்காவில் நடைபெற்ற திருப்பலியில், திருத்தந்தை சாம்பலை அர்ச்சித்து, அனைவருக்கும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.