2017-03-02 15:02:00

தவக்கால சிந்தனை : கேள்வி கேட்டல்


இன்றைய நற்செய்தியிலே (மத்.9,14-15) யோவானின் சீடர்கள், இயேசுவிடம் கேள்விகள் கேட்பதைப் பார்க்கின்றோம். நாம் வாழும் சமுதாயச் சூழலை நாம் சற்று உற்று நோக்கி பார்த்தோமென்றால், ஒரு சில குடும்பங்களில், கணவர் எடுக்கும் முடிவுகளை கேள்வி கேட்க மனைவியருக்கு உரிமைகள் தரப்படுவதில்லை. பிள்ளைகள் எங்கு போகிறார்கள், என்ன செய்கிறார்கள் போன்றவை பற்றி கேள்வி கேட்க, பெற்றோர்களுக்கு உரிமை இருப்பதில்லை. முதலாளிகள், தங்களிடம் வேலை செய்யும் அலுவலர்களையும், ஊழியர்களையும் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை. அரசியல்வாதிகள், மக்கள், தங்களை, கேள்வி கேட்க இடம் தருவதில்லை. இவை, பிறரை அடிமைப்படுத்த நினைக்கும் சுயநலத்தின் வெளிப்பாடு. இவை ஒருபுறம் இருக்க, மறுபுறம், நாம் கேள்விகளே கேட்பதில்லை. பணக்காரன் செய்யும் தவறினைக் கேள்வி கேட்பதில்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சாதி வேறுபாடு பார்ப்பவரை, கேள்வி கேட்பதில்லை. பதவியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் செய்யும் குறைகளை, கேள்வி கேட்பதில்லை. இவை, தன்னலனைப் பற்றி மட்டும் சிந்திக்கும் சுயநலத்தின் வெளிப்பாடு. எனவே, இவற்றைத் தவிர்த்து, சரியான நேரங்களில் பிறரைக் கேள்வி கேட்கவும், நம்மை, பிறர், கேள்வி கேட்க அனுமதிக்கவும், பழகிக்கொண்டோமென்றால், நல்லதொரு வாழ்வுப் பயணத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ளமுடியும். (அ.சகோ. செலூக்காஸ் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.