2017-03-01 15:46:00

மார்ச் 1 முதல், தமிழகத்தில், பெப்ஸி, கோக் விற்பனைக்குத் தடை


மார்ச்,01,2017. தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி, மற்றும் கொக்க கோலா விற்பனை நிறுத்தம் மார்ச் 1, இப்புதன் முதல், அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மற்றும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை, இந்த விற்பனை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த பானங்களைத் தவிர்க்கவேண்டும் என்று, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் கூறி வருவதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர், தா.வெள்ளையன் அவர்கள் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தினால் உந்தப்பட்டு, ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் கடைகளில் அந்த பானங்களின் விற்பனை நிறுத்தப்படும் என அறிவித்த நிலையில், ஏற்கெனவே 75 விழுக்காடு அளவுக்கு விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாகத் வெள்ளையன் அவர்கள் தெரிவித்தார்.

தங்கள் அமைப்பில் 50 லட்சம் வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், அதில் 2 விழுக்காடு பேர்தான் இந்த பானங்களை விற்பனை செய்வதாகவும் அவர்களும் அதை மார்ச் 1 முதல் நிறுத்திவிடுவார்கள் என்றும், அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிறுவன குளிர்பானங்கள் உடலுக்குக் கேடுவிளைவிப்பதாகவும், அவை, பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாகவும், வெள்ளையன் அவர்கள் குற்றம் சாட்டினார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிரான அமைப்பான பீடாவுக்கு எதிராக இளைஞர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்நேரத்தில், வெளிநாட்டு பானங்களுக்கு எதிரான பிரச்சாரமும் சூடுபிடித்தது. வர்த்தக அமைப்புக்கள் முறைப்படி அந்த பானங்களின் விற்பனையைத் தடை செய்ய மாணவர்களின் போராட்டங்களே வழிவகுத்தன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.