2017-03-01 15:56:00

பாகிஸ்தான் தலத்திருவையின் தவக்கால முயற்சிகள்


மார்ச்,01,2017. துவங்கியிருக்கும் தவக்காலத்தையொட்டி, கைம்பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவும் வகையில் நிதி திரட்டவும், நோயுற்றோரையும், மாற்றுத் திறனாளிகளைச் சந்திக்கவும், பாகிஸ்தான் தலத்திருவை முடிவெடுத்துள்ளது என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

இதுவரை தங்கள் மறைமாவட்டத்தில் திரட்டப்பட்டுள்ள நிதியைக் கொண்டு, 70 கைம்பெண்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் உதவிகளைத் துவக்கியிருப்பதாக, ஹைதராபாத் ஆயர், ஷுக்கார்தின் சாம்சன் (Shukardin Samson) அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

லாகூர் உயர் மறைமாவட்டத்தில், நோயுற்றோரையும், மாற்றுத் திறனாளிகளையும் அடிக்கடி சந்தித்து, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு வழி செய்யும் வகையில், பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அம்மறைமாவட்டம் கூறியுள்ளது.

கராச்சி உயர் மறைமாவட்டத்தில், மக்கள் உண்ணா நோன்பு முயற்சிகளை மேற்கொள்வதோடு, தங்கள் உணவை, அந்நகரில் உள்ள வறியோருடன் பகிர்ந்துகொள்ளும் செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளதென, புனித பேட்ரிக் பேராலய பங்கு அருள்பணியாளர் மாரியோ ரொட்ரிகுவெஸ் அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.