2017-03-01 14:49:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 6


மார்ச்,01,2017. இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான், அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர் (மாற்.3:13-19) என, நற்செய்தியில் வாசிக்கின்றோம். இயேசு அழைத்த பன்னிரு திருத்தூதர்கள் பல்வேறு பின்னணிகளைக் கொண்டிருந்தவர்கள். உரோமை பேரரசுக்கு வரிதண்டும் வேலை செய்தவர் மத்தேயு. தீவிரவாதியாய் இருந்த சீமோனும், வித்தியாசமான சூழலிலிருந்து வந்தவர்தான். அக்காலத்தில், புனித பூமி, உரோமைப் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோது, யூதத் தீவிரவாதிகள், தங்களின் நாட்டின் மீது தீவிரப் பற்றுக்கொண்டிருந்தவர்கள் மட்டுமல்ல, கெரில்லா யுக்திகளாலும், பயங்கரவாத முறைகளாலும், கொலைகளாலும், பதுங்கியிருந்து தாக்குவதாலும், எந்த வழியிலாவது  உரோமையர்களை, புனித பூமியை விட்டு வெளியேற்ற உறுதி கொண்டிருந்தவர்கள். யாவேவைத் தவிர வேறு எந்த அரசரும் தங்களுக்கு கிடையாது, எருசலேம் தவிர, வேறு எவருக்கும் வரி செலுத்தத் தேவையில்லை. தீவிரவாதியைத் தவிர வேறு நண்பர் இல்லை என்ற விருதுவாக்கைக் கொண்டிருந்தவர்கள் என வரலாற்று ஆசிரியர் Josephus எழுதியிருக்கிறார்.

திருத்தூதர் சீமோன், தீவிரவாதியாய் இருந்த சீமோன் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். சீமோனை இவ்வாறு குறிப்பிடுவதால், இவர், அக்கால யூதத் தீவிரவாத அமைப்போடு தொடர்பு கொண்டிருந்தவர் என்று அர்த்தமல்ல. ஆனால், சீமோன், இயேசுவைப் பின்தொடர்வதற்கு முன், யூதச் சட்டத்தின் மீதும், கனானேயச் சட்டத்தின் மீதும் தீவிரப் பற்றுக் கொண்டிருந்தவர். மேலும், திருத்தூதர் பேதுருவிலிருந்து இவரைப் பிரித்துக் காட்டுவதற்காக, இவர், தீவிரவாதியாய் இருந்த சீமோன் என்று சுட்டிக்காட்டப்படுகிறார். அதோடு, இவர், கனானேயராகிய சீமோன் என்றும் அடையாளப்படுத்தப்படுகிறார் என்று விவிலிய அறிஞர்கள் சொல்கின்றனர். திருத்தூதர் சீமோனுடைய பெயர் விவிலியத்தில் அதிகம் காணப்படவில்லை. இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் பெயர் குறிப்பிடப்பட்ட இடங்களில் இவரது பெயரும் உள்ளது. இயேசு தொழுகைக் கூடத்தில் கற்பித்தபோது, அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்து, யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? (மாற்.6,3) எனக் கேட்டபோது, இவரது பெயர் இடம்பெறுகின்றது. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின்படி,  தீவிரவாதியாய் இருந்த சீமோனும், எருசலேம் சிமியோனும் ஒரே ஆள் எனவும், இவர் இயேசுவின் உறவினராக இருந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. மற்றொரு மரபுப்படி, திருத்தூதர் சீமோன், எருசலேமின் இரண்டாவது ஆயராகப் பணியாற்றியவர் எனத் தெரிகிறது.  

திருத்தூதர் சீமோன், திருத்தூதர் யூதா ததேயுவுடன் சேர்ந்து நற்செய்திப் பணியாற்றினார் என்பது மற்றொரு மரபு. மேற்கத்திய கிறிஸ்தவத்தில், இவர்கள் இருவரது விழாவும் அக்டோபர் 28ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இவர், எகிப்தில் நற்செய்தி அறிவித்த பின்னர், பெர்சியா, அல்லது அர்மேனியா அல்லது பெய்ரூட்டில் திருத்தூதர் ததேயுவுடன் சேர்ந்து நற்செய்திப் பணியாற்றினார் எனவும், இவ்விருவரும், கி.பி. 65ம் ஆண்டில், மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் எனவும், இவரைப் பற்றி பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. இவர் எருசலேம் ஆயராகப் பணியாற்றியபோது, சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. திருத்தூதர் சீமோன், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும், ஆப்ரிக்காவிலும் பயணம் செய்து நற்செய்தியை அறிவித்தார். இவர், சமாரியாவில் சிலுவையில் அறையப்பட்டார் என்று, எத்தியோப்பியக் கிறிஸ்தவர்கள் சொல்கின்றனர். சீமோனும், ததேயுவும், பெர்சிய நாட்டின் Suanir எனுமிடத்தில், நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், ததேயு ஈட்டியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார் எனவும், சீமோன் இரம்பத்தால் பாதியாக அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் எனவும் Justus Lipsius என்பவர் எழுதியிருக்கிறார். எனினும், சீமோன், ஜார்ஜிய அரசைச் சேர்ந்த Iberiaவின் Weriosphoraல் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்று, Chorene நகர் மோசஸ் எழுதியிருக்கிறார்.

திருத்தூதர் சீமோன், கி.பி ஐம்பதில் பிரித்தானியாவுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். அப்போது பிரித்தானியா, உரோமைப் பேரரசின் ஆட்சியின்கீழ் இருந்தது. அந்நாட்டில், Caistor எனுமிடத்தில், அதாவது, தற்போதைய Lincolnshireல், மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றும் ஒரு பாரம்பரியம் சொல்கிறது. இயேசுவை, இஸ்லாமின் இறைவாக்கினராக ஏற்கும் முஸ்லிம் மதத்தவரின் மரபுப்படி, திருத்தூதர் சீமோன், வட ஆப்ரிக்காவுக்கு அப்பாலுள்ள Berbersவுக்கு, நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்பட்டார். வட ஆப்ரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர், போதிக்கும் பணிக்காக, பலரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார் என்று தெரிகிறது.

மொத்தத்தில், திருத்தூதர் சீமோன், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் செபத்தினாலும், அனைத்து இடர்களையும் தகர்த்து தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். இறுதியில், இயேசுவுக்காகக் கொல்லப்பட்டார். இவரின் உடல் இரம்பத்தால் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு, ஈட்டியால் குத்தப்பட்டதாகவே பொதுவாக நம்பப்படுகிறது. இத்திருத்தூதர், இரம்பத்தைக் கொண்டிருப்பவராகச் சித்தரிக்கப்படுகிறார். இவர், தோல் பதனிடும் தொழிலாளரின் பாதுகாவலர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.