2017-03-01 16:12:00

கொலையுண்ட பாகிஸ்தான் அமைச்சரைக் குறித்து புதிய நூல்


மார்ச்,01,2017. பாகிஸ்தான் அரசில், சிறுபான்மை மதத்துறையின் அமைச்சராகப் பணியாற்றிய ஷாபாஸ் பாட்டி (Shahbaz Bhatti) அவர்கள் கொல்லப்பட்டதன் 6ம் ஆண்டு நினைவையொட்டி, நூல் ஒன்று, இத்தாலியின் மிலான் நகரில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கொல்லப்பட்ட ஷாபாஸ் பாட்டி அவர்களின் சகோதரர், பால் பாட்டி (Paul Bhatti) அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூலுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

"ஷாபாஸ்: நீதியின் குரல்" என்ற தலைப்பில் எழுதப்பட்டு, பவுல் துறவு சபையினரால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில், ஷாபாஸ் அவர்கள், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும், கிறிஸ்தவ சிறுபான்மையினர் சார்பில் குரல் கொடுத்தது குறித்து சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

இந்நூலை எழுதிய பால் பாட்டி அவர்கள், அறுவைச் சிகிச்சை மருத்துவராக பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர் என்றாலும், தன் சகோதரர் கொலையுண்டதையடுத்து அவர் பாகிஸ்தானுக்குத் திரும்பி, அரசு ஆதரவுடன், சிறுபான்மையினருக்காக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.