2017-02-25 15:36:00

பிறரை ஒதுக்கி வாழும் ஒரு சமுதாயம் மனிதகுலத்திற்கு இழுக்கு


பிப்.25,2017. எல்லா மனிதரின் மாண்பு மதிக்கப்பட்டு, நலிந்தவர்கள் மற்றும், தேவையில் இருப்போரை ஏற்றுக்கொள்ளும் திறனை வைத்தே, ஒரு சமுதாய வாழ்வின் தரம் அளக்கப்படும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, கூறினார்.

Capodarco என்ற கழகத்தின் ஏறக்குறைய 2,600 உறுப்பினர்களை, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல், மனம் மற்றும், ஒழுக்கநெறியில் குறையுள்ளவர்கள் உட்பட, எல்லா மனிதரையும் ஏற்கும் சமுதாயமே, முதிர்ச்சியடைந்த சமுதாயமாக நோக்கப்படும் என்றும் கூறினார்.

Capodarco கழகம், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் நற்பணிகளையும், வழங்கிவரும் சான்று வாழ்வையும் பாராட்டிப் பேசிய திருத்தந்தை, உடலளவிலும், மனத்தளவிலும் காயமடைந்தவர்களை வரவேற்று, அவர்களுக்குப் பணியாற்றுவது, கடவுளின் கனிவான அன்புக்கு அளிக்கும் சிறந்த சான்று என்றும் தெரிவித்தார்.

Capodarco குழு, மாற்றுத்திறனாளிகள் மற்றும், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றும் ஒரு கழகமாகும். கிழக்கு இத்தாலிய நகரமான Fermoவில், 1966ம் ஆண்டு கிறிஸ்மஸ் அன்று, அருள்பணி Franco Monterubbianesi என்பவரால் இது தொடங்கப்பட்டது. இத்தாலி தவிர, அல்பேனியா, கோசோவோ, ருமேனியா, பிரேசில், ஈக்குவதோர், குவாத்தமாலா, காமரூன், கினி பிசாவ், ஆகிய நாடுகளிலும், இக்கழகம் பணியாற்றி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.