2017-02-25 15:31:00

தென் சூடான் போர்க் குற்றங்கள் குறித்து ஆயர்கள் கவலை


பிப்.25,2017. தென் சூடானில் பஞ்சம் பரவலாக மக்களை வாட்டிவரும்வேளை, அந்நாட்டில் இடம்பெறும் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு, தல ஆயர்கள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்வாறு தங்களின் மேய்ப்புப்பணி அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ள, தென் சூடான் ஆயர்கள், நாட்டில் இடம்பெறும் போர்க் குற்றங்கள், இனத்தின் அடிப்படையில், போரிடும் இருதரப்பினராலும் இழைக்கப்படுகின்றன என்று குறை கூறியுள்ளனர்.

அப்பாவி மக்கள், கொலை செய்யப்படுவதும், சித்ரவதைப்படுத்தப்படுவதும், பாலியல் வன்செயலுக்கு உள்ளாவதும் போர்க்காலக் குற்றங்கள் எனக் கூறும் ஆயர்கள், மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும்போது அவ்வீடுகளுக்குத் தீ வைக்கப்படுகின்றன எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

மனிதரின் நடவடிக்கை காரணமாக, நாட்டில் கடும் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது என்றும், போரிடும் அனைத்து தரப்பினரும் சண்டையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து விண்ணப்பித்து வந்தாலும், ஆலயங்களும், ஆலயச் சொத்துக்களும் தாக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளனர், ஆயர்கள்.

எதிரிகள் என கருதப்படுவோர், கொலை, பாலியல் வன்கொடுமை, சித்ரவதை, அடி உதை, திருட்டு, கைது, வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேற்றப்படுதல், அறுவடை செய்யத் தடை போன்ற துன்பங்களுக்கு உள்ளாகின்றனர் எனவும், தென் சூடான் ஆயர்கள் கூறியுள்ளனர் 

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.